மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2.38 கோடி-சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டுள்ளது

சென்னையில் இதுநாள்வரை 23 ஆயிரத்து 841 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரம் வரை வழங்கப்பட்டுள்ளது.

Update: 2020-09-12 23:30 GMT
சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் ஊரடங்கால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காக தேசிய அடையாள அட்டை (நீல நிற அட்டை) வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அவர்களது விவரங்கள் மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. அந்தவகையில் சென்னையில் இதுநாள்வரை 23 ஆயிரத்து 841 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரம் வரை வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஊரடங்கால் பிற மாவட்டங்களில் இருந்து சென்னையில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களது விவரங்களை மாநகராட்சி களப்பணியாளர்களிடம் சமர்ப்பித்து நிவாரண நிதியை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் 044-24714758 என்ற எண்ணில் அலுவலக நேரங்களிலும், 18004250111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்