புதுச்சேரியில் மேலும் 11 இடங்களில் முழு ஊரடங்கு கலெக்டர் அருண் உத்தரவு

புதுவையில் மேலும் 11 இடங்களில் உள்ளூர் ஊரடங்கு பிறப்பித்து கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-09-12 22:57 GMT
புதுச்சேரி,

புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பு உள்ள பகுதிகள், தொற்று பரவல் அதிகம் உள்ள இடங்களில் உள்ளூர் ஊரடங்கு பிறப்பிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுவை பகுதியில் ஏற்கனவே 11 தெருக்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் இருந்து வருகிறது.

இந்தநிலையில் தொற்று பரவல் அதிகம் உள்ள மேலும் 11 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கலெக்டர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாளை முதல் அமல்

அதன்படி ரெட்டியார் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட காராமணிக்குப்பம் பாவேந்தர் வீதி, பவளநகரில் முத்துமாரியம்மன்கோவில் வீதி, உழவர்கரை நண்பர்கள் நகர், காட்டேரிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட காட்டேரிக்குப்பம் மேட்டுத்தெரு, பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட இருளன்சந்தை வ.உ.சி. நகர், மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய பகுதியான திலாசுப்பேட்டை தேரோடும் வீதி, அபிசேகப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட அபிசேகப்பாக்கம் அம்பேத்கர் வீதி, மடுகரை மெயின்ரோடு, மாரியம்மன் கோவில் வீதி, கொசப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் புதுசாரம் ராஜீவ்காந்தி நகர் 2-வது குறுக்கு தெரு, லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் அசோக் நகர் பாரதிதாசன் வீதி ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி வரை அமலில் இருக்கும்.

கடைகள் மூடல்

இந்த பகுதியில் அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கவேண்டும். காய்கறி, மளிகை கடைகள் மட்டும் காலை 6 மணிமுதல் பகல் 12 மணிவரை திறந்திருக்கலாம்.

இந்த பகுதிகளில் போக்குவரத்து அனுமதிக்கப்படாது. உத்தரவினை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்றுநோய் பரவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் அருண் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்