களைக்கொல்லி மருந்து வீசியதில் சிறுகிழங்கு பயிர் சேதம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி புகார்

சிறுகிழங்கு பயிரில் களைக்கொல்லி மருந்து வீசி சேதம் விளைவித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி புகார் மனு கொடுத்துள்ளார்.

Update: 2020-09-12 23:39 GMT
தென்காசி,

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் புதுத்தெருவை சேர்ந்தவர் விவசாயி அணைக்கரை செண்டு. இவர் தனது மனைவியுடன் நேற்று மதியம் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு, சேதமடைந்த பயிர்களுடன் வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

எனக்கு பொட்டல்புதூர் கிராமத்தில் 8 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. அதில் 3 ஏக்கர் பகுதியில் நான் சிறுகிழங்கு பயிரிட்டுள்ளேன். இந்த பயிர் நன்கு விளைந்து பூக்கும் பருவத்தில் உள்ளது. இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த ஒருவர் கடந்த 8-ந் தேதி களைக்கொல்லி மருந்தை மணலில் கலந்து சிறுகிழங்கு பயிரில் வீசியுள்ளார்.

இதனால் விளைந்த பயிர்கள் அனைத்தும் கருகி சேதமாகி உள்ளது. இதன் காரணமாக எனக்கு ரூ.6 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நிவாரணம்

இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் செய்தேன். அங்கு எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதனை பரிசீலனை செய்து எனது விவசாய நிலத்தை பாதிக்க செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து அவரிடம் இருந்து எனக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்