ஏரல் அருகே பயங்கரம்: பெண் கற்பழித்து கொலை அரை நிர்வாண நிலையில் பிணம் வீச்சு

ஏரல் அருகே பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அரை நிர்வாண நிலையில் வீசப்பட்ட அவரது உடலை மீட்டு கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-09-12 23:46 GMT
ஏரல்,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சம்படி மேல தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி செங்கமலம் (வயது 47). இவர்களுக்கு வடக்குவாசெல்வி (13), மீனாட்சி (12) ஆகிய 2 மகள்களும், கோமதிசங்கர் (9) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் இறந்து விட்டார். இதனால் செங்கமலம் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். அவர் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை.

இதனால் வடக்குவாசெல்வி, புதுப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிலும், மீனாட்சி, ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிலும் வசித்து வருகின்றனர். அவர்கள் அங்குள்ள பள்ளிக்கூடங்களில் படித்து வருகின்றனர். செங்கமலத்துடன் மகன் கோமதிசங்கர் வசித்து வந்தான். அவன், அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

அரை நிர்வாண நிலையில்...

நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் செங்கமலம் தனது வீட்டில் மகனுடன் தூங்கினார். நேற்று காலையில் கண்விழித்த கோமதிசங்கர் வீட்டில் தன்னுடைய தாயாரைக் காணாததால் அதிர்ச்சி அடைந்தான். உடனே அவன் அருகில் உள்ள வீடுகளில் சென்று தாயாரை தேடினான். மேலும், அக்கம்பக்கத்தினரும் செங்கமலத்தை தேடினர்.

அப்போது செங்கமலத்தின் வீட்டில் உள்ள ஒரு அறையில் ரத்தக்கறை படிந்து இருந்தது. அங்கு ரத்தம் படிந்த செங்கற்களும் சிதறி கிடந்தன. மேலும் வீட்டின் பின்பக்க படிக்கட்டுகளிலும் ரத்தக்கறை படிந்து இருந்தது. இதையடுத்து செங்கமலத்தின் வீட்டின் அருகில் உள்ள இடங்களில் சென்று தேடினர்.

அப்போது வீட்டின் பின்புறம் வழியாக வாழைத் தோட்டத்துக்கு செல்லும் வழியில் புதர் செடிகளுக்கு இடையில் அரை நிர்வாண நிலையில் செங்கமலம் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது முகத்தில் ரத்தக்காயம் இருந்தது. மேலும் ஆடைகளும் களையப்பட்ட நிலையில் இருந்தது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, ஏரல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

உடனே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், ஏரல் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலை நடந்த இடத்தில் பதிவான தடயங்களை தடயவியல் நிபுணர் கலா லட்சுமி, கைரேகை நிபுணர் வைஜேந்தி மாலா ஆகியோர் சேகரித்தனர்.

கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்த போலீஸ் மோப்ப நாய், அங்குள்ள தெருக்களிலும், வாழை தோட்டத்திலும் சுற்றி வந்தது. ஆனாலும் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இறந்த செங்கமலத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

நேற்று முன்தினம் நள்ளிரவில் செங்கமலத்தின் வீட்டுக்கு வந்த மர்மநபர்கள், செங்கமலத்தை கற்பழித்து அவரது தலையில் செங்கற்களால் தாக்கி கொலை செய்து இருக்கலாம், பின்னர் அவரது உடலை இழுத்து சென்று, புதர் செடிகளுக்கு இடையே வீசி விட்டு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணை கற்பழித்து கொலை செய்த கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் ஏரல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்