ராயப்பேட்டையில் மேம்பாலத்தில் மோதி மினி வேன் கவிழ்ந்தது; 24 பேர் படுகாயம்

சென்னை ராயப்பேட்டையில் மேம்பாலத்தில் மோதி மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2020-09-13 23:15 GMT
சென்னை, 

கடலூரில் இருந்து நேற்று மினி வேன் ஒன்று சென்னை வந்தது. இந்த வேனில் 24 பேர் பயணம் செய்தனர். இந்த வேன் நேற்று இரவு 10.30 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை மேம்பாலம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

அப்போது வேன் உள்ளே இருந்தவர்கள் அலறி துடித்தனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த விபத்தை கண்டு சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த 24 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 8 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். இதற்கிடையே கவிழ்ந்த மினி வேன் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

விபத்துக்கு உள்ளான வேனில் சிறு குழந்தைகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் கடலூரில் இருந்து சென்னையில் உறவினர் ஒருவரின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு வந்திருப்பது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


மேலும் செய்திகள்