மும்பையை அவமதித்த ‘கங்கனாவிற்கு பா.ஜனதா ஆதரவு அளிப்பது துரதிருஷ்டவசமானது’ சஞ்சய் ராவத் வேதனை

மும்பையை அவமதித்த ‘கங்கனாவிற்கு பாரதீய ஜனதா ஆதரவு அளிப்பது துரதிருஷ்டவசமானது’ என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

Update: 2020-09-13 21:05 GMT
மும்பை,

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக மும்பை போலீசார், இந்தி திரையுலகம் மீது குற்றச்சாட்டுகளை கூறிய நடிகை கங்கனா ரணாவத் மும்பையை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறினார். இதனால் அவருக்கும் மாநிலத்தை ஆளும் சிவசேனாவுக்கும் மோதல் ஏற்பட்டது.

இந்தநிலையில் பாந்திரா பாலிஹில்லில் உள்ள நடிகையின் வீட்டில் செய்யப்பட்டு இருந்த சட்டவிரோத புதுப்பிப்பு பணிகளை மாநகராட்சி இடித்து அகற்றியது. இந்த விவகாரத்தல் பாரதீய ஜனதா ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தநிலையில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறி அவமதித்த கங்கனாவுக்கு பாரதீய ஜனதா ஆதரவு அளித்தது துரதிருஷ்டவசமானது என சாம்னா பத்திரிகையில் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

சதித்திட்டம்

இந்த கடின காலத்தில் மராத்தியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மும்பையின் முக்கியத்துவத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து சதிதிட்டங்கள் மூலம் மும்பை அவமதிக்கப்படுகிறது. கங்கனாவுக்கு ஆதரவு அளித்து, ராஜ்புத் மற்றும் சத்ரியர்கள் சமூக வாக்குகளை பெற்று பீகார் தேர்தலில் வெற்றி பெற பாரதீய ஜனதா விரும்புகிறது. ஆனால் இதன் மூலம் மராட்டியம் அவமதிக்கப்பட்டால் அவர்களுக்கு கவலையில்லை. மாநிலம் அவமதிக்கப்பட்டதால் ஒரு பாரதீய ஜனதா தலைவர் கூட வருத்தப்படவில்லை. ஒரு நடிகை முதல்-மந்திரியையும், மாநில மக்களையும் அவமானப்படுத்துகிறார். என்ன ஒரு தலைப்பட்சமான சுதந்திரம் இது?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்