போதைப்பொருள் விவகாரத்தில் பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்தப்பட வேண்டும் சித்தராமையா சொல்கிறார்

போதைப்பொருள் விவகாரத்தில் அரசியல் பழிவாங்கும் நோக்கம் இருக்க கூடாது என்றும், பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-13 21:56 GMT
பெங்களூரு,

கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்தும் விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் முன்னாள் மந்திரி ஜமீர் அகமதுகானின் பெயரும் அடிபடுகிறது. அவரது ஆதரவாளர் சேக் பாசிலுக்கு போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதால், அவரை போலீசார் தேடிவருகிறார்கள். சித்தராமையாவுடனும் சேக் பாசில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், போதைப்பொருள் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

பாரபட்சம் இல்லாமல் விசாரணை

போதைப்பொருள் பயன்படுத்துவது, விற்பனை விவகாரம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணை பாரபட்சம் இல்லாமல் நடத்தப்பட வேண்டும். அரசின் தோல்வியை மூடிமறைக்க வழக்கு விசாரணையை திசை திருப்ப முயற்சிகள் நடக்கிறது.

ஜமீர் அகமதுகான் இலங்கைக்கு சென்று வந்ததால், அவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார். அவர் சூதாட்ட விடுதிக்கு சென்றாரா? என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. நான் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, சூதாட்ட விடுதியின் முன்பக்க கதவை மட்டுமே பார்த்துள்ளேன்.

பழிவாங்கும் நோக்கம் கூடாது

போதைப்பொருள் விவகாரத்தில் ஜமீர் அகமதுகான் மற்றும் சேக் பாசிலுக்கு தொடர்பு இருப்பதாக பிரசாந்த் சம்பரகி கூறியுள்ளார். சேக் பாசில் என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். அவர் ஒரு திருடர் என்றால், அவருடன் புகைப்படத்தில் நானும் இருப்பதால், திருடர் என்று என்னை சொல்ல முடியுமா?. போதைப்பொருள் விவகாரத்தில் தனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என்று, என்னை சந்தித்து ஜமீர் அகமதுகான் விளக்கம் அளித்துள்ளார்.

பிரசாந்த் சம்பரகி குற்றச்சாட்டு கூறுவதால், ஜமீர் அகமதுகான் மீதான குற்றச்சாட்டு உண்மையாகி விடாது. பிரசாந்த் சம்பரகி பா.ஜனதா தலைவர்களுடன் தொடர்பில் இல்லையா?. போதைப்பொருள் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும். அதில் எந்த விதமான பாரபட்சமும் காட்டக்கூடாது. அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் அரசியல் பழிவாங்கும் நோக்கம் இருக்க கூடாது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்