வெளியூர் மையங்களில் நீட் தேர்வு எழுதுவதற்காக காரைக்கால் மாணவர்களுக்கு சிறப்பு பஸ்கள் பி.ஆர்.டி.சி. சார்பில் இயக்கப்பட்டன

காரைக்காலில் இருந்து நீட் தேர்வுக்காக புதுச்சேரி மற்றும் வெளியூர் களுக்கு சென்ற மாணவர்கள், பெற்றோர் களுக்கு அரசு சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி) சார்பில் 14 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Update: 2020-09-13 22:40 GMT
காரைக்கால்,

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. புதுச்சேரியில் 15 மையங்களில் நீட் தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காரைக்காலை சேர்ந்த 225 மாணவர்களுக்கு புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டம் நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து அரசு சாலை போக்குவரத்து சார்பில் 14 பஸ்கள் நேற்று காலை காரைக் கால் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டன. இதில் புதுச்சேரிக்கு 10, சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய ஊர்களுக்கு தலா ஒரு பஸ் வீதம் மொத்தம் 14 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

இந்த பஸ்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து மாணவர்களும், அவர்களது பெற்றோரும் பயணம் செய்தனர். முன்னதாக காரைக்கால் மாவட்ட அரசு நிர்வாகம், வணிகர் சங்கத்துடன் இணைந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முக கவசம், கிருமிநாசினி, தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக் கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

சிறப்பு பஸ்களை மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட், அரசு போக்குவரத்துக் கழக மேலாளர் குழந்தைவேலு, வணிகர் சங்க தலைவர் முத்தையா, பொருளாளர் இளங்கோவன், துணைத் தலைவர் கோபால்சாமி, துணை செயலாளர் துரைராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கொரோனா காலத்தில், கூடுதல் சமூக சேவை செய்த போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

மேலும் செய்திகள்