சிவகிரி அருகே கல்லால் தாக்கப்பட்ட சாலை பணியாளர் சாவு கொலை வழக்குப்பதிவு; மாணவர்கள் உள்பட 4 பேர் கைது

சிவகிரி அருகே கல்லால் தாக்கப்பட்ட சாலை பணியாளர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

Update: 2020-09-13 23:26 GMT
சிவகிரி,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மூக்கையா மகன் விக்னேசுவரன் (வயது 21), கொத்தாளம் மகன் சந்திர பிரகாஷ் (19), மூக்கையா மகன் ராஜா (19), அய்யர் மகன் ராமசாமி (20). இவர்கள் 4 பேரும் நண்பர்கள். விக்னேசுவரன், சந்திர பிரகாஷ் ஆகிய 2 பேரும் என்ஜினீயரிங் படித்து வருகின்றனர். ராஜா, ராமசாமி ஆகிய 2 பேரும் கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் 4 பேரும் கடந்த 6-ந்தேதி 2 மோட்டார் சைக்கிள்களில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே குண்டாற்றில் சென்று குளித்தனர். பின்னர் இரவில் அவர்கள் அங்கிருந்து தங்களது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

கல்லால் தாக்கி...

சிவகிரி அருகே உள்ளார் தளவாய்புரம் பகுதியில் சென்றபோது, அங்கு அவர்கள் சாலையோரம் தங்களது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு, பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக உள்ளார் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சாலைப் பணியாளரான சரவணகுமார் (41), அவருடைய அண்ணன் சீனிச்சாமி ஆகிய 2 பேரும் நடந்து சென்றனர். அப்போது அவர்கள், அங்கு நின்று கொண்டிருந்த விக்னேசுவரன் உள்ளிட்ட 4 பேரிடமும், எதற்காக இங்கு நிற்கின்றீர்கள்? என்று விசாரித்தனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஆத்திரம் அடைந்த விக்னேசுவரன் உள்ளிட்டவர்களில் ஒருவர் திடீரென்று கல்லால் சரவணகுமாரை தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சரவணகுமாருக்கு சிவகிரி தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் சரவணகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

4 பேர் கைது

இதையடுத்து சிவகிரி போலீசார் விக்னேசுவரன் உள்ளிட்ட 4 பேர் மீதான கொலைமுயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் விக்னேசுவரன் உள்ளிட்ட 4 பேரையும் சிவகிரி கோர்ட்டில் நீதிபதி பிரியங்கா முன்னிலையில் ஆஜர்படுத்தி, சங்கரன்கோவில் கிளை சிறையில் அடைத்தனர். கல்லால் தாக்கப்பட்ட சாலை பணியாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்