‘நீட்’ தேர்வு அச்சத்தால் தற்கொலை: திருச்செங்கோடு மாணவர் உடல் தகனம் - அமைச்சர் தங்கமணி நேரில் ஆறுதல்

‘நீட்’ தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட திருச்செங்கோடு மாணவர் மோதிலால் உடல் தகனம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கமணி மாணவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Update: 2020-09-13 22:15 GMT
எலச்சிபாளையம்,

மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வு அச்சம் காரணமாக நேற்று முன்தினம் தமிழகத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அதில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலைசுத்தி ரோடு இடையர்புரம் பகுதியை சேர்ந்த மோதிலால் (வயது 21) என்ற மாணவரும் ஒருவர்.

இவரது தந்தை முருகேசன் (48). இவர் வாலரைகேட் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கோமதி (42). மோதிலாலுக்கு சுபாஷ் (15) என்ற சகோதர் உள்ளார்.

மோதிலால் கொசவன் பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2017-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்துள்ளார். இவர் பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1087 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மோதிலால் சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 முறை நடந்த நீட் தேர்வுகளிலும் பங்கேற்று போதிய மதிப்பெண்களை மோதிலால் பெறவில்லை.

இந்த ஆண்டு நீட் தேர்வில் எப்படியும் வெற்றி பெற்று டாக்டராக வேண்டும் என்ற எண்ணத்துடன் நாமக்கல்லில் உள்ள தனியார் கோச்சிங் சென்டர் ஒன்றில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். மேலும் இரவு, பகல் பாராமல் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதன் காரணமாக சற்று மன அழுத்தத்தில் மோதிலால் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த முறையும் நீட் தேர்வில் போதிய மதிப்பெண் கிடைக்காமல் டாக்டர் ஆகும் கனவு சிதைந்து விடுமோ என்ற அச்சமும் அவருக்கு ஏற்பட்டது. இதனை கவனித்த பெற்றோர், மருத்துவம் கிடைக்கவில்லை என்றால் வேறு படிப்பு படித்து கொள்ளலாம் என அறிவுரை கூறிவந்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை படிப்பதாக கூறி வீட்டில் தனது அறைக்கு சென்ற மோதிலால், சாப்பிட வரவில்லை. இதனால் தாய் கோமதி மகனை சாப்பிட அழைக்க சென்றார். அப்போது மோதிலால் அறையில் இருந்த கம்பி ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மகனின் உடலை பார்த்து கோமதி கதறி அழுதார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மோதிலால் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மோதிலால் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள், அவருடன் படித்த சக மாணவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதைத்தொடர்ந்து மோதிலால் உடல் திருச்செங்கோட்டை அடுத்த செங்கோடம்பாளையம் மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் மோதிலால் வீட்டுக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் சென்றார். பின்னர் அவர் மாணவனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கை. அதைத்தான் நாங்களும் பின்பற்றி வருகிறோம். நீட் பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய கவுன்சிலிங் தருவது குறித்து முதல்-அமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். மோதிலால் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் தெரிவிப்பார் என்றார்.

அப்போது மாவட்ட கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம் மற்றும் அரசுத்துறை உயரதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்