மசினகுடி-ஊட்டி சாலையில் காட்டுயானையை தொந்தரவு செய்த ஜீப் டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

மசினகுடி-ஊட்டி சாலையில் காட்டுயானையை தொந்தரவு செய்த ஜீப் டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2020-09-14 06:03 GMT
கூடலூர்,

மசினகுடியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் சீகூர் பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு காட்டுயானை ஒன்று நின்று கொண்டு இருந்தது. இதனால் ஊட்டியில் இருந்து மசினகுடி நோக்கி வந்த வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே வாகனங்கள் சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டது. ஆனால் காட்டுயானை அங்கிருந்து செல்லாமல் நீண்ட நேரம் சாலையின் நடுவில் நின்று கொண்டு இருந்தது. இதனால் பொறுமை இழந்த டிரைவர் ஒருவர், தனது ஜீப்பை ஹாரன் அடித்தவாறு காட்டுயானையை நோக்கி இயக்கினார். அப்போது காட்டுயானை பிளிறியது. இருப்பினும் அதன் மீது ஜீப்பை மோதுவது போல் ஓட்டி சென்றார். இதனால் ஜீப்பை காட்டுயானை தாக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்த காட்சியை ஜீப்புக்கு பின்னால் வந்த மற்றொரு வாகன டிரைவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இது மிகவும் வைரலாக பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் உடனடியாக சம்பந்தப்பட்ட ஜீப் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிங்காரா வனச்சரகர் காந்தன் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் மசினகுடியை சேர்ந்த அந்த ஜீப் டிரைவர் விஜின்(வயது 24) என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். இதுகுறித்து வனச்சரகர் காந்தன் கூறும்போது, வாகன ஓட்டிகள் வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் சாலையில் நின்றிருந்த காட்டுயானை மீது ஜீப்பை மோதுவது போல் மசினகுடியை சேர்ந்த ஜீப் டிரைவர் விஜின் தொந்தரவு செய்து உள்ளார். இதனால் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இனிமேல் யாராவது வனவிலங்குகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்