சுரண்டையில் குடியிருப்பு பகுதிக்கு பாதை வசதி செய்து தர வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

சுரண்டையில் குடியிருப்பு பகுதிக்கு பாதை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள், தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2020-09-14 22:30 GMT
தென்காசி,

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த சில மாதங்களாக தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் மனுக்களை பொதுமக்கள் போட்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று தென்காசி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மரகதநாதன், துணை கலெக்டர் சரவண கண்ணன் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினர். ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் நின்று மனுக்களை வழங்கினர்.

சுரண்டை அண்ணாநகர் முதலாவது தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் வழங்கிய மனுவில் கூறி இருப்பதாவது:-

எங்களது தெருவில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களது தெருவின் மேல்புறம் அரசு புறம்போக்கு இடமும், மழைநீர் வடிகால் கால்வாயும் உள்ளது. அந்த பகுதியில் கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் உள்ளது. ஆலடிப்பட்டி செல்ல இவ்வழியாக பஞ்சாயத்து ரோடு உள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் போலீஸ் குடியிருப்பு கட்ட இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்திற்கும் நாங்கள் பயன்படுத்திக் கொண்டு இருக்கும் பகுதிக்கும் சுமார் 300 அடி தூரம் உள்ளது.

இந்த நிலையில் போலீசார், நாங்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் இடம் வரையிலும் முள் வேலியிட்டு, எங்களிடம் யாரும் உள்ளே வரக்கூடாது என தடுத்து விட்டார்கள். இதனால் நாங்கள் நடந்துகூட செல்ல முடியாத அளவில் இருக்கிறோம். சாலையின் கீழ்ப்பகுதியிலும் தனியாரால் அடைக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் எங்களது நிலையை கருத்தில் கொண்டு, எங்களது குடியிருப்புகளுக்கு செல்ல பாதை வசதி செய்து தர கேட்டு கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வன வேங்கைகள் கட்சி சார்பில் மாநில இளைஞரணி துணை செயலாளர் குமார் தலைமையில் அக்கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள், கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கொடுத்த மனுவில், நீட் தேர்வினால் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மாணவர்களின் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து கொடுத்துள்ள மனுவில், கொரோனாவால் இறந்தவர்களின் உடலை மருத்துவமனை நிர்வாகம் அல்லது நகராட்சி நிர்வாகம் சார்பில், உறவினர்களின் முன்னிலையில் தகனம் செய்கிறார்கள். இதனால் உறவினர்களால் இறுதிச் சடங்கு நடத்த முடியவில்லை. கொரோனா தொற்றினால் இறந்தாலும், அவர்களது உடலில் இருந்து நோய் தொற்று மற்றவர்களுக்கு பரவாது என்று கூறுகிறார்கள். எனவே இறந்தவர்களின் உடலை அவரவர் மதச்சடங்குகளின் படி தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சேர்ந்தமரம் இந்து முன்னணி செயலாளர் பால்ராஜ் கொடுத்துள்ள மனுவில், சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆலங்குளம் தாலுகா பூலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஜெகநாதன் கொடுத்துள்ள மனுவில், நாகல்குளத்தில் இருந்து ஆலங்குளம் செல்லும் கால்வாயை ஜம்புநதி கால்வாய் இணையக்கூடிய அருந்ததியர் நகர் வழியாக சண்முகபுரம் ஊருணி, நேரு நகர், கிருஷ்ணாபேரி ஊருணி, பூலாங்குளம் வழியாக ஆலங்குளம் மற்றும் மற்ற குளங்களுக்கு செல்லுமாறு சீரமைத்து தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணை செயலாளர் ஆதம் பின் ஹனிபா கொடுத்துள்ள மனுவில், கொரோனா காலத்தில் தென்காசி தினசரி சந்தை அடைக்கப்பட்டு பழைய பஸ் நிலையத்தில் இயங்கி வருகிறது. தற்போது பஸ்கள் இயங்க தொடங்கி விட்டதால், மீண்டும் தினசரி சந்தையை திறந்து கடைகளை மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கரு.வீரபாண்டியன் கொடுத்துள்ள மனுவில், சிவகிரி தாலுகா வேலாயுதபுரம் கீழ புதூரில் அருந்ததியர் மக்கள் வழிபடும் குலதெய்வ கோவிலான சேர்வரான் கம்மாட்சி கோவிலுக்கு கீழப்புதூர், வேலாயுதபுரம், ராமநாதபுரம், சங்குபுரம், கீழ புளியங்குடி, தேசியம்பட்டி, அரியூர் ஆகிய ஊர்களில் இருந்து அருந்ததியர் சமுதாய மக்கள் வழிபட்டு வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக கோவிலுக்கு செல்லும் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவிலுக்கு செல்ல முடியவில்லை. இந்த நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றி தருமாறு கேட்டு கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்