பண்ருட்டி விவசாயி வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: சொந்த வீட்டிலேயே திருடிய மகன் கைது

பண்ருட்டியில் விவசாயி வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளைபோன வழக்கில் திடீர் திருப்பமாக மனைவிக்காக சின்னத்திரை தொடர் தயாரிக்க சொந்த வீட்டிலேயே நகை-பணம் திருடிய மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-09-15 03:12 GMT
பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகைமேடு மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் தேசிங்கு (வயது 55), விவசாயி. இவர் சம்பவத்தன்று காலை தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றார். பின்னர் அவர் மாலையில் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அப்போது வீட்டில் உள்ள அலமாரிகள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.

மேலும் அலமாரிகளில் வைத்திருந்த 18 பவுன் நகை, 300 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தையும் காணவில்லை. அதனை யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாத், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

சின்னத்திரையில் நடிக்க...

இதற்கிடையே தேசிங்கு மகன் மணிகண்டனின்(24) நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் சொந்த வீட்டிலேயே நகை-பணத்தை மணிகண்டன் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், மணிகண்டன் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். பின்னர் அவர் சென்னையை சேர்ந்த சின்னத்திரை நடிகையான பரமேஸ்வரி என்கிற சுசித்ராவை காதலித்து 2-வது திருமணம் செய்து கொண்டு சென்னையிலேயே வசித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி தவித்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் பரமேஸ்வரிக்கு சின்னத்திரையில் நாடகத்தை இயக்கி, நடிக்க பணம் தேவைப்பட்டதாக தெரிகிறது. மேலும் சூதாட்ட பழக்கமுடைய மணிகண்டனுக்கு, சூதாட்டத்திற்கும் பணம் தேவைப்பட்டுள்ளது.

கொள்ளையடிக்க சதித்திட்டம்

இதனால் பரமேஸ்வரியும், மணிகண்டனும் தங்களுக்கு தேவையான பணத்தை எப்படி திரட்டலாம் என ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது தான் மணிகண்டனும், பரமேஸ்வரியும் சொந்த வீட்டிலேயே கொள்ளையடிக்க முடிவு செய்து சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி சம்பவத்தன்று காலை தேசிங்கு வீட்டை பூட்டி, சாவியை வீட்டின் வெளியே வைத்து விட்டு தோட்டத்திற்கு சென்ற பிறகு, மணிகண்டன் வீட்டின் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று அலமாரிகளை உடைத்து நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துள்ளார்.

பின்னர் கொள்ளையடித்த நகைகளை வீட்டின் பின்புறம் மண்ணில் புதைத்து வைத்துவிட்டு, தனக்கு ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடியுள்ளார். இதற்கிடையே மணிகண்டன், பண்ருட்டி ராஜாஜி ரோட்டில் உள்ள ஒரு கடைக்கு சென்று நகைகளை விற்க முயன்ற போது, போலீசில் சிக்கினார்.

கைது

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் அவர் மண்ணில் புதைத்து வைத்திருந்த நகை மற்றும் பணத்தை போலீசார் மீட்டனர். தொடர்ந்து கொள்ளை சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டி உடந்தையாக இருந்த பரமேஸ்வரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மனைவி சின்னத்திரையில் நடிக்கவும், தான் சூதாடவும் சொந்த வீட்டிலேயே வாலிபர் பணத்தை திருடிய சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்