கடலூரில் ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை கொள்ளை

கடலூரில் ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகையை கொள்ளையடித்த முகமூடி அணிந்த நபர், வங்கியிலும் திருட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-15 03:15 GMT
கடலூர்,

கடலூர் செம்மண்டலம் வரதராஜன்நகர் ஸ்டேட் பேங்க் காலனியில் கடந்த 3 மாதங்களாக தனியார் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த 12-ந்தேதி மாலையில் பணி முடிந்ததும் ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

இந்நிலையில் நேற்று ஊழியர் ஒருவர், வங்கியை திறப்பதற்காக வந்தார். அப்போது முன்பக்கம் உள்ள இரும்பு கேட், பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மெயின் கதவை திறக்க சென்றார். அப்போது அந்த கதவின் ஒரு பகுதி சேதமடைந்து இருந்தது. இது பற்றி அவர், உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

கொள்ளை முயற்சி

இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து, கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள தனி அறையில் அவர்கள் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் அப்படியே இருந்தது. இதைத்தொடர்ந்து வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவை வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் பார்த்தனர். அதில் நேற்று முன்தினம் நள்ளிரவு முகமூடி அணிந்த நபர் ஒருவர், எதிரே உள்ள வீட்டில் இருந்து குதித்து வங்கிக்கு வருகிறார்.

பின்னர் வங்கி முன்பக்கம் உள்ள இரும்பு கதவு பூட்டை உடைத்து விட்டு மெயின் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் பூட்டு உடையாததால் கொள்ளையடிக்க முடியாமல் சென்று விட்டார். அப்போது அங்கிருந்த கேமராவை திருப்பி வைத்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த கேமராவில் பதிவாகி உள்ளது.

நகை கொள்ளை

இதையடுத்து எதிரே உள்ள வீட்டில் வசித்து வரும் ஜெயராமன் மகன் மகாராஜா (வயது 38) என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெளியூருக்கு சென்றிருந்த அவர் தனது வீட்டுக்கு வந்து பார்த்தார். அங்கே அவரது வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள், துணிமணிகள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 16 பவுன் நகைகளை காணவில்லை. அதனை முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் கொள்ளையடித்து சென்று விட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வரும் மகாராஜா கடந்த 12-ந்தேதி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊரான குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆபத்தாரணபுரத்திற்கு சென்றிருந்தார். அந்த நேரத்தில் தான் மர்மநபர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி, குற்றவாளியை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

வலைவீச்சு

மேலும் வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தார். முன்னதாக கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் முக்கிய தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ.6 லட்சம் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்