வேலூர் மாவட்டத்தில் 3 வியாபாரிகள் உள்பட 122 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,849 ஆக உயர்ந்தது

வேலூர் மாவட்டத்தில் 3 வியாபாரிகள் உள்பட 122 பேர் ஒரேநாளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,849 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-09-15 05:50 GMT
வேலூர்,

வேலூர் நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு கடை வியாபாரிகள், ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 50-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. அதன்பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. அதில் 3 வியாபாரிகளுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த கடைகளில் பணிபுரிந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் 2 நர்சுகள், ஊழியர்கள் உள்பட 5 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வடமாநிலத்தை சேர்ந்த 5 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

11,567 பேர் குணமடைந்துள்ளனர்

வேலூரில் உள்ள துணிக்கடை ஊழியர், கைத்தறி விற்பனை கடை ஊழியர், தனியார் பஸ் நிறுவன ஊழியர், சத்துவாச்சாரியில் பச்சிளம் ஆண்குழந்தை, முள்ளிப்பாளையத்தில் 8 வயது ஆண்குழந்தை, முண்டியம்பட்டில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 3 பேர், சித்தேரியில் 76 வயது மூதாட்டி, கஸ்பாவில் 90 வயது முதியவர், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உறவினர்கள் 14 பேர் என்று வேலூர் மாநகராட்சி பகுதியில் 46 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 122 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.

122 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,849 ஆக உயர்ந்துள்ளது. 11,567 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்