நாளை மகாளய அமாவாசை: பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடை - கலெக்டர் ஷில்பா உத்தரவு

மகாளய அமாவாசையையொட்டி பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடை விதித்து கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

Update: 2020-09-15 23:00 GMT
விக்கிரமசிங்கபுரம்,

இந்துக்களின் முக்கிய விரத நாளான மகாளய அமாவாசை நாளை (வியாழக்கிழமை) வருகிறது. இந்த நாளில் தங்களது குடும்பத்தில் இறந்த மூதாதையர்களுக்கு பாபநாசம் தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் வைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருவதாலும், ஒரே இடத்தில் அதிக மக்கள் கூடுவதால் நோய் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாலும் பொது மக்களின் நலன் கருதி புரட்டாசி மகாளய அமாவாசையான நாளை பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்படுகிறது.

மேலும் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 20-ந் தேதி வரை தாமிரபரணி ஆற்றங்கரை படித்துறைகளில் ஒன்றுகூடி புனித நீராடுவதற்கோ, பரிகார பூஜைகள் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்வதற்கு அனுமதி இல்லை.

அரசு ஏற்கனவே விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி கோவில்களில் பொதுமக்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்