பாளையங்கோட்டை சிவன் கோவில் தெப்பக்குளத்தை சுற்றி ஆக்கிரமிப்பு: ஒரே நாளில் 27 வீடுகள் இடிப்பு போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிரடி

பாளையங்கோட்டை சிவன் கோவில் தெப்பக்குளத்தை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 27 வீடுகள் நேற்று ஒரே நாளில் இடித்து அகற்றப்பட்டன. போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Update: 2020-09-15 23:30 GMT
நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் தெப்பக்குளம் அருகில் அம்பிகாபதி தெரு, எம்பெருமான் தெரு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அரசுக்கு சொந்தமான இடத்தை இவர்கள் ஆக்கிரமித்து இருப்பதாக கூறி அவற்றை அகற்றுமாறு பல்வேறு அமைப்புகள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.

ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆக்கிரமிப்பாளர்களை காலி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அதிகாரிகள் அதற்கான நோட்டீசுகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் வழங்கினர்.

கடந்த வாரம் அந்த வீடுகளுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 11-ந் தேதி வீடுகள் இடிக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது. உடனே அந்தப்பகுதி மக்கள், நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கு சமையல் செய்யும் போராட்டத்தை நடத்தினர். தாங்கள் வசிக்கும் அதே இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவுப்படி, பாளையங்கோட்டை சிவன் கோவில் தெப்பக்குளம் அருகே நேற்று காலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி அதிரடியாக தொடங்கியது. பாளையங்கோட்டை தாசில்தார் தாஸ் பிரியன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் மைதீன், மாநகராட்சி மண்டல உதவி ஆணையாளர்கள் பிரேம் ஆனந்த், அய்யப்பன், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பொக்லைன் எந்திரங்களுடன் தெப்பக்குளம் பகுதிக்கு வந்தனர். அப்போது ஏராளமான போலீசாரும் அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரங்களை கொண்டு அங்கு இருந்த 27 வீடுகள் அதிகாரிகள் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியையொட்டி பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர் ரோட்டில் நேற்று போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மார்க்கெட்- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் ஒரு வழிப்பாதையை இருவழிப்பாதையாக மாற்றி வாகனங்கள் எதிரெதிரே கடந்து சென்றன. இதையொட்டி பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றத்தால் வீடுகளை இழந்தவர்கள் அந்த பகுதியில் தங்களின் உடைமைகளுடன் சோகமாக அமர்ந்து இருந்தனர். அவர்கள் தங்களுக்கு உடனடியாக மாற்று இடத்தை ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்