உடல் மாற்றி வழங்கப்பட்ட சம்பவம் சயான் ஆஸ்பத்திரியை கண்டித்து சாலை மறியல்

சயான் ஆஸ்பத்திரியில் உடல் மாற்றி வழங்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

Update: 2020-09-15 22:43 GMT
மும்பை,

மும்பை சயான் ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன் விபத்தில் பலியான அங்குஷ் என்ற வாலிபரின் உடலுக்கு பதிலாக வேறொருவரின் உடலை மாற்றி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் வாலிபரின் சிறுநீரகம் திருடப்பட்டதை மறைக் கவே ஆஸ்பத்திரி நிர்வாகம் உடலை மாற்றி நாடகமாடியதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்தநிலையில் சயான் ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்தும், உடல் மாற்றி வழங்கப்பட்ட வாலிபரின் குடும்பத்துக்கு நீதி கேட்டும் சயான் ஆஸ்பத்திரி அருகில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பிரவின் தாரேகர், பா.ஜனதா மும்பை தலைவர் மங்கல் பிரதாப் லோதா, காளிதாஸ் கோலம்கர் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தநிலையில் அவர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உடல் மாற்றி வழங்கப்பட்ட சம்பவம் குறித்து இன்று(புதன்கிழமை) மாலை 5 மணிக்கு மாநகராட்சி கமிஷனர் நேரடியாக வாலிபரின் குடும்பத்தினர் மற்றும் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.விடம் பேசுவார் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்