நாகர்கோவிலில் வறுமையால் நடந்த விபரீதம்: கணவர் இறந்ததும் குளத்தில் குதித்து மகளுடன் பெண் தற்கொலை

நாகர்கோவிலில் கணவர் இறந்ததால், குளத்தில் குதித்து மகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்டார். இன்னொரு மகள் உயிர் தப்பினார்.

Update: 2020-09-16 02:21 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே சுசீந்திரம் நல்லூரில் இளையநயினார் குளம் உள்ளது. இந்த குளத்தின் படித்துறை அருகில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் 3 பெண்கள் தண்ணீரில் மிதந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது அவர்களது கைகள் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. அவர்களில் 2 பேர் இறந்து இருந்ததும், ஒருவர் மட்டும் மயக்கம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்ததும் தெரிய வந்தது. போலீசார் அந்த கயிற்றை அவிழ்த்து உயிருக்கு போராடியவரை ஆம்புலன்சு மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் தாய்-மகள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கணேசன் ஆகியோரும் சம்பவம் நடந்த குளத்தை பார்வையிட்டதுடன், பிணமாக கிடந்த பெண்களையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முதலில் இறந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். ஆனால் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

அப்போதுதான் உயிருக்கு போராடிய பெண்ணுக்கு நினைவு திரும்பியது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அந்த பெண் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறினார். அதன் விவரம் வருமாறு:-

தச்சு தொழிலாளி

என்னுடைய பெயர் சச்சு என்ற மைதிலி (வயது 45), தந்தை வடிவேல் முருகன் (78), தாய் பங்கஜம் (70), என்னுடைய அக்காள் மாலா (46). நாங்கள் நாகர்கோவில் ஒழுகினசேரி ஆறாட்டு ரோட்டில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தோம். தந்தை தச்சு வேலை செய்து வந்தார். அவரது உழைப்பில்தான் நாங்கள் வாழ்ந்து வந்தோம். போதிய வருமானம் இல்லாததால் நாங்கள் அன்றாடம் சாப்பாட்டுக்கே சிரமப்பட்டு வந்தோம். திருமண வயதை எட்டினாலும் குடும்ப வறுமையால் எங்களுக்கு வரன் பார்க்க முடியவில்லை. எனவே நானும், அக்காளும் பெற்றோருடன் வாழ்ந்து வந்தோம்.

இதற்கிடையே என்னுடைய தந்தைக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென்று காலில் அடிபட்டது. வயதாகி விட்டதால் அந்த காயம் குணமாகவில்லை. அவர் வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்தார். அவருக்கு மருத்துவம் பார்க்க எங்களால் முடியவில்லை. அவர் நோய்வாய்ப்பட்ட பிறகு பல நாட்கள் தண்ணீரை குடித்தே பசியை போக்கினோம்.

திடீரென இறந்தார்

மருத்துவ சிகிச்சை அளிக்க பணம் இல்லாததால் அப்பாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமானது. அவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென இறந்து விட்டார். 3 பேரும் அப்பாவின் உடலை பார்த்து நீண்ட நேரம் அழுது புலம்பினோம். அப்பா இல்லாமல் நாம் என்ன செய்ய போகிறோம். இனி எப்படி வாழ்வது என்று என்னுடைய தாய் கூறினார். நாங்கள் 3 பேரும் சேர்ந்து அப்பா இல்லாத உலகத்தில் நாமும் இருக்க வேண்டாம் என்றும், அதற்காக தற்கொலை செய்து கொள்வதுதான் சரியான வழி என்ற முடிவுக்கு வந்தோம்.

அதிகாலை 3 மணி அளவில் என்னுடைய தந்தையின் உடலை வீட்டுக்குள்ளேயே கட்டிலில் அப்படியே போட்டு விட்டு வீட்டை பூட்டினோம். பின்னர் சுசீந்திரம் அருகே உள்ள நல்லூரில் உள்ள இளையநயினார் குளத்தக்கு நடந்தே 3 பேரும் சென்றோம். அங்கு ஒரு கயிற்றால் 3 பேரின் கைகளையும் ஒருவர் மாற்றி ஒருவர் கட்டிக்கொண்டோம். ஒரே நேரத்தில் 3 பேரும் குளத்துக்குள் குதித்தோம். என்னுடைய தாயும், அக்காளும் இறந்து விட்டனர். நான் மட்டும் உயிர் பிழைத்துக்கொண்டேன் என்று கூறியபடி மைதிலி கதறி அழுதது விசாரணை நடத்திய போலீசாரை கண்கலங்க செய்தது.

கதவை உடைத்து பிணம் மீட்பு

மைதிலி கூறிய தகவலை தொடர்ந்து போலீசார் ஒழுகினசேரி ஆறாட்டு ரோட்டில் உள்ள வடிவேல்முருகன் வசித்த வீட்டுக்கு வந்தனர். அங்கு கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மைதிலி கூறியபடி கட்டிலில் வடிவேல்முருகன் பிணமாக கிடந்தார். அந்த உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குடும்ப வறுமையால் கணவர் இறந்ததும், குளத்தில் குதித்து மகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்