திருப்பரங்குன்றம் அருகே, சிமெண்டு கடை உரிமையாளர் குத்திக்கொலை - தடுக்க முயன்ற மனைவி, மகன் படுகாயம்

திருப்பரங்குன்றம் அருகே சிமெண்டு கடை உரிமையாளர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அதில் அவரது மனைவி மற்றும் மகன் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-09-16 12:45 GMT
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம்(வயது 60). இவர் அதே பகுதியில் சிமெண்டு கடை வைத்து நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு சிவலிங்கத்திற்கும், கடைக்கு வந்தவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இந்தநிலையில் சிவலிங்கத்தை அந்த நபர் கத்தியால் குத்தினார். அப்போது கடைக்கு வந்த சிவலிங்கத்தின் மனைவி சரோஜா(55), மகன் சிவக்குமார்(28) ஆகியோர் கத்திக்குத்தை தடுக்க முயன்றனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதற்கிடையில் கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சிவலிங்கம் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். கத்திக்குத்தை தடுக்க முயன்று காயமடைந்த சரோஜா, சிவக்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிவக்குமாருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும், அவருக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் சிவக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் முதல் மனைவி குடும்பத்தினரிடம் முன்விரோதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் தான் சிவலிங்கம் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. கொலை நடந்த இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி திரும்பியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

சிவலிங்கத்தின் சிமெண்டு கடை மற்றும் வீட்டு வளாகத்தில் கேமரா இருப்பதால் கொலை செய்யப்பட்டது பதிவாகியுள்ளது. அதை போலீசார் கைப்பற்றி கொலையாளி தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்