செஞ்சி அருகே, டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு மதுபாட்டில்கள் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

செஞ்சி அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-09-16 12:45 GMT
செஞ்சி, 

செஞ்சி அருகே ஒட்டம்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் மேற்பார்வையாளர் சீனுவாசன், விற்பனையாளர் மணிகண்டன் ஆகியோர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று கடையை திறந்து வியாபாரத்தை தொடங்க வந்தனர். அப்போது கடையின் பின்பக்க சுவரில் துளை போடப்பட்டிருப்பததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கடையில் இருந்த 629 மதுபாட்டில்களை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.86 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்த தகவலின் பேரில் அனந்தபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடையை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், டாஸ்மாக் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கடையின் பின்பக்க சுவற்றில் துளை போட்டு உள்ளே புகுந்து மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கடையில் ஏற்கனவே 2 முறை கொள்ளை சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்