திருச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனியார் பஸ்கள் இயங்கின பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம்

திருச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனியார் பஸ்கள் இயங்கின. பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.

Update: 2020-09-17 00:53 GMT
திருச்சி,

கொரோனா வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பஸ், ரெயில் மற்றும் விமான போக்குவரத்து முடக்கப்பட்டன. அதன் பிறகு ஊரடங்கில் இருந்து படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஸ்களை இயக்காமல் இருந்து வந்தனர்.

இந்தநிலையில் இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, நேற்று முதல் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் 147 தனியார் டவுன் பஸ்களும் 153 புறநகர் பஸ்களும் என 300 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. முதல் நாளான நேற்று 60 டவுன் பஸ்களும், 50 புறநகர் பஸ்களும் இயக்கப்பட்டன. பொதுமக்கள் ஆர்வத்துடன் பஸ்களில் பயணம் செய்தனர். சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலின்படி 50 முதல் 60 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டன.

முக கவசம் கட்டாயம்

பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரு சீட்டில் ஒருவர் மட்டுமே அமர வைக்கப்பட்டனர். ஆனால் ஒரு சிலர் முக கவசம் அணியாமலும் பஸ்சில் ஏறினர். முன்னதாக பஸ்சில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு இயக்கப்பட்டன. இதுகுறித்து தமிழ்நாடு பஸ் உரிமையாளர் சங்கங்களின் சம்மேளன செயலாளர் தர்மராஜ் கூறுகையில், “பஸ்கள் பல நாட்களாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் இன்சூரன்ஸ் சான்றிதழ் பெறுவதற்காக சில பஸ்கள் இன்னும் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அந்த நடைமுறை முடிந்து அனைத்து பஸ்களும் முழுமையாக இயக்கப்படும். கொ ரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் படி அனைத்து பஸ் உரிமையாளர்களிடமும் அறிவுறுத்தி உள்ளோம்“ என்றார்.

மேலும் செய்திகள்