டெல்டா மாவட்டங்களில் 77 நாட்களுக்கு பிறகு ஓடிய தனியார் பஸ்கள்

டெல்டா மாவட்டங்களில் 77 நாட்களுக்கு பிறகு தனியார் பஸ்கள் ஓடின.

Update: 2020-09-17 01:39 GMT
தஞ்சாவூர்,

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முதலில் மாவட்டத்திற்குள் மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. 7-ந் தேதி முதல் மாவட்டம் விட்டு பிற மாவட்டங்களுக்கும் அரசு பஸ்கள், விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுவும் 50 சதவீத பஸ்களே இயக்கப்படுகின்றன. தஞ்சையில் இருந்து சென்னைக்கு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதே நேரத்தில் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. முழு இருக்கைகளையும் நிரப்ப அனுமதிக்க வேண்டும். பஸ்கள் இயங்காத நாட்களுக்கு வரி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஒரு மாதத்திற்கான வரியை செலுத்தினால் போதும் எனவும், 60 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க வேண்டும் எனவும் பஸ் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இயக்கம்

இதையடுத்து தமிழகம் முழுவதும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 77 நாட்களுக்கு பிறகு தனியார் பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன. சமூக இடைவெளியுடன் 60 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டன. முக கவசம் அணியாதவர்களை பஸ்சில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 325 தனியார் பஸ்கள் உள்ளன. இவற்றில் 80 பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சையில் இருந்து திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயககப்பட்டன. மீதமுள்ள பஸ்கள் விரைவில் இயக்கப்படும்.

77 நாட்களுக்கு பிறகு

இது குறித்து தனியார் பஸ் உரிமையாளர் சங்க மாநில பொருளாளர் பி.எல்.ஏ.சிதம்பரம் கூறும்போது, நாளை (அதாவது இன்று) 75 சதவீத பஸ்கள் இயக்கப்படும். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சான்றிதழ் பெற வேண்டிய நிலை இருப்பதால் அடுத்த மாதம்(அக்டோபர்) முதல் அனைத்து தனியார் பஸ்களும் இயக்கப்படும் என்றார்.

ஜூலை 1-ந் தேதி முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது 77 நாட்களுக்கு பிறகு தனியார் பஸ்கள் இயக்கப்படுவதால் தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அரசு பஸ்களுடன் கூடுதலாக தனியார் பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்களும் மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்