கால்கள் முறிந்த நிலையில் பிணம் மீட்கப்பட்டதில் துப்பு துலங்கியது: சரக்கு வாகனத்தில் கடத்தி வியாபாரி அடித்துக் கொலை - பெண் உள்பட கும்பலை பிடித்து போலீசார் விசாரணை

புதுவையில் கை, கால்கள் முறிந்த நிலையில் பிணம் மீட்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் துப்பு துலக்கியதில் வியாபாரியான அவர் சரக்கு வாகனத்தில் கடத்திக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக பெண் உள்பட சிலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2020-09-17 23:38 GMT
புதுச்சேரி,

புதுவை ஆம்பூர் சாலையில் ஆசிரமம் தங்கும் விடுதி எதிரே உள்ள கார் நிறுத்தும் இடத்தில் கடந்த 14-ந்தேதி சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியில் கடை வைத்திருக்கும் ராஜேந்திரன் என்பவர் பெரியகடை போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்தவரின் இடது கை, கால்கள் முறிந்த நிலையில் கார் நிறுத்தும் இடத்தில் படுத்து இருந்த போது அது தெரியாமல் ஏதாவது சுற்றுலா வந்த கார் மோதியதில் அவர் இறந்து இருக்கலாம் என்று முதலில் போலீசார் கருதினார்கள்.

இதையடுத்து சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து எந்த வாகனம் மோதி இறந்தார் என்பது தொடர்பாக பார்வையிட்டனர்.

அப்போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அன்றைய தினம் சிறிய லோடு கேரியர் வாகனம் ஒன்று சம்பவம் நடந்த அந்த பகுதியில் சிறிது நேரம் நின்று சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த வாகன பதிவு எண்ணை கண்டறிந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதில் கை, கால் முறிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டவர் சரக்கு வாகனத்தில் (சரக்கு கேரியர்) வந்த 2 பேர் அந்த நபரை அங்கு கடத்திக் கொண்டு வந்து அடித்துக் கொலை செய்து விட்டு பிணத்தை அங்கு தூக்கி வீசி விட்டு சென்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக தொடர்ந்து நடத்திய போலீசாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் சிதம்பரம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 45) என்பது தெரியவந்தது. குடும்பத் தகராறில் மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்து புதுச்சேரிக்கு வந்துள்ளார். இங்கு வந்து சேதராப்பட்டு பகுதியில் தங்கிய அய்யப்பன் அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.

அந்த பகுதியில் உள்ள சுமை தூக்குவோர் சங்கம் அருகில் படுத்து தூங்கியுள்ளார். அங்கு கொய்யாப்பழம் மொத்த வியாபாரம் செய்யும் பெண் ஒருவரிடம் கொய்யாப்பழத்தை விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்தார். ஆனால் அதற்குரிய பணத்தை அய்யப்பன் திரும்ப கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதுதொடர்பாக அந்த பெண் பணத்தை திருப்பி கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 2 பேர் அவரை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து விலக்கி விட்டுள்ளனர்.

இந்தநிலையில் அய்யப்பனை லோடு கேரியர் வாகனத்தில் ஏற்றிய அந்த நபர்கள் மீண்டும் தாக்கியுள்ளனர். அதன்பின் அவரை ஆம்பூர் சாலைக்கு கொண்டு வந்து தூக்கிப்போட்டுவிட்டு தப்பிச் சென்றதும், அவர்களது தாக்குதலில் தான் அய்யப்பன் கை, கால் முறிந்த நிலையில் உயிரிழந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

தற்போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண் உள்பட சிலர் போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளனர். சம்பவம் நடந்த இடம் சேதராப்பட்டு பகுதி என்பதால் இந்த வழக்கு சேதராப்பட்டு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. முதலில் சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கினை கொலை வழக்காக பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்