காஞ்சீபுரத்தில் கூட்டுறவு சங்கத்தில் பண மோசடி; செயலர், நிர்வாகிகள் பணியிடை நீக்கம்

காஞ்சீபுரம் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக அச்சங்க செயலர் மற்றும் நிர்வாகிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2020-09-18 00:06 GMT
காஞ்சீபுரம்,

கூட்டுறவு துறையின் கீழ், அரசு துறை ஊழியர்கள் அடங்கிய கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. துறை ரீதியாக பல்வேறு இடங்களில், இந்த கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. அரசு ஊழியர்கள் இச்சங்கங்களில் கடன் பெறுவதும், டெபாசிட் செய்து பயன் பெறுவதும் வாடிக்கையாக உள்ளது.

காஞ்சீபுரம் தாலுகா வளாகத்தில் செயல்பட்டு வரும் பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கான கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த சங்கத்தில் 212 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் டெபாசிட் செய்த லட்சக்கணக்கான பணத்தை, சங்க செயலர் வெங்கடேசன், பல்வேறு வகையில் மோசடி செய்வதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரித்த, காஞ்சீபுரம் மாவட்ட கூட்டுறவு துறை இணை பதிவாளர் சந்திரசேகர், டெபாசிட் பணத்துக்கு முறையான ரசீது வழங்காமல், உறுப்பினர்களை ஏமாற்றி, லட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இணை பதிவாளர் சந்திரசேகர், சங்க செயலரான வெங்கடேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். சங்க பதிவேடுகள் பலவற்றை, அவர் மறைத்து வைத்தது தெரிந்து, அவரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.

மேலும், வெங்கடேசனை கவனிக்க தவறியதாக, சங்க தலைவர் பாலச்சந்தர் மற்றும் துணை தலைவர் மார்க்ஸ் ஆகிய இருவரும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்