ஆரல்வாய்மொழி அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு

ஆரல்வாய்மொழி அருகே தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற விவசாயி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.

Update: 2020-09-18 02:46 GMT
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் நாராயண நாடார் (வயது 65), விவசாயி. இவருக்கு ராஜபொன்னு என்ற மனைவியும், ஒரு மகனும், 4 மகள்களும் உள்ளனர். நாராயண நாடாரின் தோட்டம் குமாரபுரம் அருகே மெயின் ரோட்டில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை நாராயண நாடார் தோட்டத்தில் பயிரிட்டுள்ள பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு வருவதாக கூறி சென்றார். அதன்பிறகு இரவு வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில் காற்றாலைக்கு வேலைக்கு சென்ற மகன் ராதாகிருஷ்ணன் இரவு வீடு திரும்பினார். அப்போது தந்தை வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்தார்.

கிணற்றில் பிணமாக...

உடனே, ராதாகிருஷ்ணன் தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அங்கு குறைந்த அளவு தண்ணீர் உள்ள 200 அடி ஆழ கிணற்றில் நாராயண நாடார் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதார்.

பின்னர் இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் துரை தலைமையிலான வீரர்கள் மற்றும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் கிணற்றில் பிணமாக மிதந்த நாராயண நாடாரை மீட்டனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்க சென்றபோது, நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து இறந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்