கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2020-09-18 03:13 GMT
கிருஷ்ணகிரி,

பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாளை பா.ஜனதா கட்சியினர் நாடு முழுவதும் நேற்று கொண்டாடினார்கள். இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் சார்பில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் நல உதவிகளும் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் கட்சி பிரமுகரும், தொழில் அதிபருமான வி.எம்.அன்பரசன் தலைமையில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. குந்தாரப்பள்ளி மாரியம்மன் கோவில், ராமர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதில் நரேந்திரமோடி பெயரில் பா.ஜனதா கட்சியினர் சார்பில் அர்ச்சனை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு அருகில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. 70 மரக்கன்றுகளும் நடப்பட்டன. நிகழ்ச்சியை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.சீனிவாச அய்யர், இ.ராமமூர்த்தி, நிர்வாகிகள் ஸ்ரீராமலு, மாதப்பன், ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நல உதவிகள்

பிரதமர் நரேந்திர மோடியின், 70-வது பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் மாவட்ட, மாநில ஊடகப் பிரிவின் சார்பில், கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை காந்திசாலையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ஊடகப் பிரிவு மாநில செயலாளர் அகத்தியன் சரவணன் தலைமை தாங்கினார். இதில் மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன், மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி கோட்டீஸ்வரன் ஆகியோர், மோடியின் 70-வது பிறந்தநாளையொட்டி, 70 அடி நீளத்தில், 70 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் பொதுமக்களுக்கு முக கவசம், கொரோனா தடுப்பு ஹோமியோபதி மாத்திரை மற்றும் அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டன.

மேலும் 70 கோவில்களுக்கு அன்னதானத்திற்கு அரிசி, எண்ணெய் ஆகியவையும் வழங்கப்பட்டன. இதில் நிர்வாகிகள் மீசை அர்ச்சுனன், மின்னல் சிவக்குமார், கண்ணப்பன், மாதவன், மன்னன் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊடகப்பிரிவுத் தலைவர் வேல்வேந்தன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்