கூடலூரில், மூதாட்டி கொலை வழக்கில் மருமகன் கைது

கூடலூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்த வழக்கில் அவரது மருமகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-09-18 09:15 GMT
கூடலூர், 

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட புத்தூர் வயலை சேர்ந்தவர் எல்சி என்பவரின் வீட்டிற்கு வந்த ஏச்சம் வயல் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி (வயது 65) கடந்த 12-ந் தேதி இரவு மர்ம நபரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெய்சிங், அமீர் அகமது, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நிர்மலா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் ஊட்டியில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இருப்பினும் குற்றவாளி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல பிரிவுகளாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மூதாட்டி பத்மாவதியின் மருமகன் ரமேஷ் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் பத்மாவதியை கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ரமேஷ் கூறியதாவது:-

1984-ம் ஆண்டு பத்மாவதியின் மகள் சோபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டேன் எங்களுக்கு தினேஷ், பினேஷ் என 2 மகன்கள் உள்ளனர். எனக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. மேலும் மற்றொரு பெண்ணிடம் தொடர்பு இருந்து வந்தது. இதனால் கடந்த 2008-ம் ஆண்டு அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் குடியேறினேன். இந்த நிலையில் அந்தப் பெண்ணை விட்டு கடந்த ஜனவரி மாதம் கூடலூர் ஏச்சம் வயலுக்கு சென்றேன்.

அப்போது எனது மாமியார் பத்மாவதி, என்னை திட்டினார். இதனால் அவர் மீது கோபம் ஏற்பட்டது. எனவே அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினேன். கடந்த 12-ம் தேதி கூடலூருக்கு சென்று மது அருந்தினேன். பின்னர் போதையில் புத்தூர்வயல் சென்றேன். அங்கு எல்சி வீட்டில் தனியாக இருந்த எனது மாமியாரின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்தேன்.

பின்னர் யாருக்கும் தெரியாமல் எனது வீட்டுக்கு சென்றுவிட்டேன். ஆனால் போலீசாரின் தொடர் விசாரணையில் சிக்கி விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ரமேசை கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்