செஞ்சி அருகே, அடகுக்கடையில் ரூ.10 ஆயிரம் திருட்டு - லாக்கரை தூக்கிச்சென்று மர்மநபர்கள் கைவரிசை

செஞ்சி அருகே அடகுக்கடை லாக்கரை தூக்கிச் சென்று அதில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-09-18 13:30 GMT
செஞ்சி, 

செஞ்சி அடுத்த வி.நயம்பாடி சவுட்டூர் என்ற ஊரை சேர்ந்தவர் பச்சையப்பன்(வயது 45). இவர் பாலப்பாடி என்ற ஊரில் நகை அடகுக்கடை வைத்து நடத்தி வருகிறார். பச்சையப்பன், தினசரி அடகு வைத்த நகைகளை வீட்டுக்கு எடுத்து சென்று விடுவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் கடையை பூட்டிவிட்டு பச்சையப்பன் வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவில் கடைக்கு வந்த மர்மநபர்கள் கடை பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் கடையில் இருந்த லாக்கரை எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் அவர்களை பிடிக்க முயன்றார். அப்போது அவர்கள், மனோகரனை தாக்கி, கை கால்களை கயிற்றால் கட்டி அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினர்.

இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி பச்சையப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் அங்கு விரைந்து வந்தார். இதற்கிடையே இதுபற்றி அறிந்த நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடையை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். அப்போது கடையில் இருந்து சிறிது தூரத்தில் இருந்த நிலத்தில் லாக்கர் உடைக்கப்பட்டு கிடந்தது. ஆனால் அதில் இருந்த பணத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். லாக்கரில் சுமார் ரூ.10 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் ஆகியோர் கடையையும் மற்றும் லாக்கரை வீசிச்சென்ற இடத்தையும் நேரில் பார்வையிட்டனர். மேலும் விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்