புதுவையில் கொரோனா விதிகளை மீறினால் ரூ.1000 அபராதம் - கலெக்டர் அருண் உத்தரவு

கொரோனா நோயாளிகள் விதிமுறைகளை மீறினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார். புதுவை மாவட்ட கலெக்டர் அருண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

Update: 2020-09-18 23:55 GMT
புதுச்சேரி,

புதுவையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி தினந்தோறும் 3 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் தொற்று பாதித்தவர்கள் கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் பலர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

ஆனால் இவர்களில் பலர் கட்டுப்பாட்டை மீறி வெளியில் சுற்றுகிறார்கள். இவர்கள் மூலம் நோய் தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால் புதுவை அரசு பெருந்தொற்று நோய் விதிமுறை 2020-ன் பிரிவு 4ஏ-வின் கீழ் தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் வசூலிக்க திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி தனிமைப்படுத்தப்பட்ட நபர் விதிமுறைகளை மீறினால் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெறுபவர் விதிமீறினால் ரூ.1000 வசூலிக்கப்படும்.

இந்த அபராதம் மேற்கண்ட விதிமுறையின் பிரிவு 3-ன்கீழ் காவல்துறை ஆய்வாளர்கள், வருவாய்த்துறை தாசில்தார்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், நலவழித்துறை மருத்துவர்கள், அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி துறைத்தலைவர்கள் ஆகியோராலும் மற்றும் அவர்களின் உயர் அதிகாரிகளாலும் வசூல் செய்யப்படும்.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து அபராதம் கட்டுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்