சென்னையில் பொதுமக்களிடம் பறிக்கப்பட்ட 1,193 செல்போன்கள் மீட்பு காட்சிக்கு வைத்து, உரியவர்களிடம் போலீஸ் கமிஷனர் ஒப்படைத்தார்

சென்னையில் பொதுமக்களிடம் பறிக்கப்பட்ட 1,193 செல்போன்கள் மீட்கப்பட்டது. அவற்றை காட்சிக்கு வைத்து ஒரு விழா போல நடத்தி போலீஸ் கமிஷனர் நேற்று உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

Update: 2020-09-19 00:32 GMT
சென்னை,

சென்னையில் தற்போது அதிக அளவில் தினந்தோறும் நடைபெறும் குற்றச்செயல்களாக கருதப்படுவது செல்போன் பறிப்பு சம்பவங்கள்தான். தினமும் சென்னையில் குறைந்தது 10 செல்போன் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியது. நடந்த சம்பவங்களில் ஒரு சில சம்பவங்களில்தான் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். பெரும்பாலானவர்கள் செல்போனை பறிகொடுத்துவிட்டு, போலீசில் புகார் கொடுப்பதில்லை. போலீசாரும் செல்போன் பறிப்பு சம்பவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுப்பதில்லை.

சென்னை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு, செல்போன் பறிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய போலீசாருக்கு எளிதாக இருந்தது. இதனால் செல்போன் பறிப்பு குற்றவாளிகளை போலீசார் சம்பவம் நடந்தவுடன் உடனடியாக கைது செய்ய ஆரம்பித்தனர்.

செல்போன் பறிப்பு குற்றங்களில் பெரும்பாலும் சிறுவர்கள் தான் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்கள் கூட இதை தொழிலாக ஓசை இல்லாமல் செய்ய ஆரம்பித்தனர். இந்தியா முழுவதும் நெட் ஒர்க் அமைத்து பெரிய கும்பல் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது. செல்போனை பறித்தவுடன், அந்த செல்போன் அடுத்த சில மணி நேரத்தில் பலரது கையை தாண்டி சென்றுவிடும். பறித்தவர்களுக்கு ஏதோ கொஞ்சம் பணம் கிடைக்கும்.

போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை கூண்டோடு கைது செய்ய உத்தரவிட்டார். சென்னையில் நச்சு காற்று போல பரவி இருந்த செல்போன் பறிப்பு கும்பல் மீது போலீசார் அதிரடி நடவடிக்கையை தொடங்கினார்கள்.

சென்னையில் 12 போலீஸ் மாவட்டங்களிலும் தனித்தனியாக சைபர் கிரைம் பிரிவு தொடங்கப்பட்ட பிறகு, உள்ளூர் போலீசாருக்கு செல்போன் குற்றவாளிகளை கைது செய்ய மேலும் எளிதாக இருந்தது.

அந்த வகையில் போலீசார் தொடங்கிய அதிரடி நடவடிக்கையின் பலனாக சென்னை முழுவதும் பொதுமக்களிடம் பறிக்கப்பட்ட 1,193 செல்போன்கள் சமீபத்தில் போலீசாரால் மீட்கப்பட்டது. அந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் ஒரு விழா போல நடத்தப்பட்டது.

ஒவ்வொரு துணை கமிஷனர் சரகத்திலும் மீட்கப்பட்ட செல்போன்கள் அங்கு காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. கமிஷனர் மகேஷ்குமார்அகர்வால் அவற்றை நேரில் சென்று பார்வையிட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் அருண், தினகரன், அமல்ராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்