ஆரணியில், தாலுகா அலுவலகத்தை திருநங்கைகள் ‘திடீர்’ முற்றுகை - வீடுகள் கட்டித்தரக்கோரி போராட்டம்

ஆரணி தாலுகா பகுதியை சேர்ந்த திருநங்கைகள் தங்களுக்கு வீடுகள் கட்டித்தரக்கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-19 05:00 GMT
ஆரணி,

ஆரணி தாலுகா பகுதியில் பல்வேறு இடங்களில் திருநங்கைகள் வசிக்கின்றனர். இவர்கள் குடியிருக்க இடமின்றி தவித்து வருகின்றனர். எனவே அவர்கள் தங்களுக்கு பட்டா வழங்கி வீடு கட்டி தர வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் ஆரணி தாலுகாவை சேர்ந்த திருநங்கைகள் 43 பேர் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்துக்குள் சென்றனர். அங்கு தாசில்தார் இல்லாததால் மண்டல துணை தாசில்தார் பிரபுவிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்.

அப்போது திருநங்கைகள் கூறுகையில், “ஆரணி தாலுகாவில் சேவூர், ராட்டினமங்கலம், பையூர், ஆரணி நகரிலும் சுற்று வட்டார பகுதிகளிலும் 43 பேர் வசித்து வருகிறோம்.

எங்களது வீட்டிலேயே எங்களை அனுமதிப்பதில்லை அந்த தெருக்களிலும் எங்களை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள்.எ ங்களுக்கு என ஒரு பகுதியை அரசு நிர்ணயம் செய்து அதில் 43 பேருக்கும் தனித்தனியே வீட்டுமனை ஒதுக்கி அங்கு அரசே எங்களுக்கு வீடுகளை கட்டி தர வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திருநங்கைகளுக்கு இடம் ஒதுக்கி வீடுகளைக் கட்டித் தந்து உள்ளார்கள். ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் இந்த பிரச்சினை நீண்ட நாட்களாக நீடித்துக் கொண்டே இருக்கிறது. எனவே கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு வழங்கி உள்ளோம்” என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்