மாடித் தோட்டத்தில் திராட்சை சாகுபடி காரைக்கால் விவசாயி அசத்தல்

மாடித் தோட்டத்தில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்து காரைக்கால் விவசாயி அசத்தி உள்ளார்.

Update: 2020-09-19 22:15 GMT
காரைக்கால்,

காரைக்கால் வடக்குத் தெருவை சேர்ந்தவர் முன்னாள் வேளாண் ஊழியர் சுப்பிரமணி. இவரது மகன் சிவக்குமார். விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தனது வீட்டில் மாடித் தோட்டம் அமைத்துள்ளார். அதில் பூ, காய்கறி, பழம், செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் கல்வாழை, மரமல்லி, சில்வர் ஓக் மரம், இடி இடித்தால் பூக்கும் தண்டர் லில்லி உள்ளிட்ட செடிகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் திராட்சை வளர்க்க சிவக்குமார் ஆசைப்பட்டார். இதற்காக திண்டுக்கல்லில் பன்னீர் திராட்சை கொடிகளை வாங்கி வந்து வளர்க்கத் தொடங்கினார். அதற்கு பஞ்சகவ்யம், இயற்கை உரம் மற்றும் காலாவதியான மாத்திரைகளை உரமாக்கி வளர்த்தார். தற்போது கொடிளில் திராட்சைகள் காய்த்து தொங்குகின்றன.

இதுகுறித்து சிவக்குமார் கூறுகையில், ‘எனது தந்தை வேளாண்துறையில் விரிவாக்க பணியாளராக இருந்தார். நான் வீட்டுத் தோட்டத்தில், விதவிதமான செடிகளை வளர்த்து வந்தேன். கடந்த 2007-ம் ஆண்டு திண்டுக் கல்லில் இருந்து 4 திராட்சை கொடியை வாங்கி வந்தேன். இதில் ஒன்று மட்டும் அருமையாக வளர்ந்து சுமார் 22 கிலோ திராட்சை அறுவடை செய்தேன். தற்போது எனது மகன்கள் ஈஸ்வர், விஷாக் ஆகியோரின் ஆசைக்காக மீண்டும் பன்னீர் திராட்சை வளர்த்து வருகிறேன். அதற்கு தண்ணீர் ஊற்றுவது, உரம் போடுவது அனைத்தையும் மகன்களே பார்த்துக்கொள் கிறார்கள். இதேபோல் மிளகு கொடி, ஏலக்காய் வளர்க்கவும் திட்டமிட்டுள்ளேன்’ என்றார்.

மேலும் செய்திகள்