புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

Update: 2020-09-19 22:56 GMT
பெரம்பலூர்,

கொரோனா ஊரடங்கினால் தமிழகத்தில் கோவில்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கோவில்கள் மீண்டும் திறக்கப்பட்டு, அரசின் வழிக்காட்டுதலின் படி பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதனால் பெருமாள் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் சுவாமியை தரிசனம் செய்ய கோவில் நிர்வாகத்தினர் அனுமதித்தனர். அதற்காக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது. அதன் வழியாக திரளான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தந்தனர். பெரம்பலூரில் உள்ள மதனகோபாலசுவாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி மூலவர் பெருமாளுக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, தயிர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவ மூர்த்தியான மதனகோபாலசுவாமியை பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இதே போல் இரவிலும் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் பெருமாளுக்கு நடைபெற்றது.

ஆஞ்சநேயர் கோவில்களிலும்...

மேலும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் முன்பு உள்ள கம்பத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. இதே போல் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் மலையில் உள்ள பூ மலை சஞ்சீவிராயருக்கும், மலை அடிவாரத்தில் உள்ள வழித்துணை ஆஞ்நேயருக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

மங்களமேடு

இதேபோல் மங்களமேடு அருகே உள்ள வாலிகண்டபுரம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் முதல் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதையொட்டி பெருமாளுக்கும் தாயாருக்கும் பால், பன்னீர், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அகிலா செய்திருந்தார்.

மேலும் செய்திகள்