பழ வியாபாரி கொலையில் தம்பதி உள்பட 4 பேர் கைது ரூ.10 ஆயிரம் கடன் பாக்கிக்காக அடித்துக் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்

பழ வியாபாரி கொலையில் தம்பதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பழம் வாங்கிய வகையில் ரூ.10 ஆயிரம் கடன் பாக்கியை கேட்டு கடத்திக் கொலை செய்ததாக போலீசில் அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Update: 2020-09-19 23:13 GMT
புதுச்சேரி,

புதுவை ஆம்பூர் சாலையில் கார் நிறுத்தும் இடத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்த 14-ந்தேதி கை, கால் முறிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து விசாரித்த பெரியகடை போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து இருக்கலாம் என்ற கோணத்தில் முதலில் விசாரித்தனர். எந்த வாகனம் என்பது குறித்து அறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் லோடுகேரியர் வாகனத்தில் வந்த 2 பேர் ஒருவரை தூக்கி வீசி விட்டுச் சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்த பெரியகடை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் கும்பகோணம் அருகே உள்ள திருக்கருகாவூர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பதும், குடும்ப தகராறில் மனைவி, குழந்தைகளை பிரிந்து வியாபாரம் செய்வதற்காக புதுச்சேரிக்கு வந்ததும் தெரியவந்தது.

தனியாக இருந்து வந்த அய்யப்பன் மரக்காணத்தில் கொய்யாப்பழ வியாபாரியான செல்வி (வயது52) என்பவரிடம் மொத்த விலைக்கு பழங்களை வாங்கி விற்றுள்ளார். கடனாக வாங்கிச் சென்ற பழத்துக்கு பணத்தை தராததால் அவருடன் செல்வி தகராறு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட விரோதத்தில் செல்வி, அவரது கணவர் பழனி (52), அரியாங்குப்பம் அரசு (40), லாஸ்பேட்டை லோடு கேரியர் வேன் டிரைவர் முத்து (42) ஆகியோர் சேர்ந்து அய்யப்பனை அடித்து கொலை செய்து ஆம்பூர் சாலை கார் நிறுத்தும் இடத்தில் வீசி விட்டு தப்பியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து முதலில் மர்ம மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. சம்பவம் நடந்த பகுதியான சேதராப்பட்டு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் விசாரித்து செல்வி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். கொரோனா பரிசோதனைக்குப் பின் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பழ வியாபாரியான அய்யப்பனை கொலை செய்ததற்கான காரணம் குறித்து கைதான தம்பதியர் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த பழனியும், அவரது மனைவி செல்வியும் கொய்யா பழங்களை குத்தகைக்கு எடுத்து மொத்த வியாபாரம் செய்து வந்தனர். செல்வியிடம் ரூ.10 ஆயிரத்துக்கு அய்யப்பன் பழங்கள் வாங்கி விற்றுள்ளார். ஆனால் அந்த பணத்தை தராமல் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

இதனால் அவரை தம்பதியர் இருவரும் தேடி வந்துள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று சேதராப்பட்டு சாராயக்கடை அருகே அய்யப்பன் நின்று இருப்பதை அறிந்து பழனியும், செல்வியும் தங்களது நண்பரான அரசு, லோடு வேன் டிரைவர் முத்து ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்று அய்யப்பனிடம் பணத்தை கேட்டுள்ளனர்.

அப்போதும் அவர் தரமறுத்ததால் சரமாரியாக அவரை அடித்து உதைத்துள்ளனர். அதன்பின் அவரை லோடு வேனில் ஏற்றி தமிழக பகுதியில் வைத்து கட்டை, கம்புகளால் தாக்கியுள்ளனர். ஏற்கனவே அரசுக்கு முன்விரோதம் இருந்ததால் அய்யப்பனை அவர் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கை, கால் முறிந்து அய்யப்பன் மயங்கினார்.

உடனே சம்பவத்தை திசை திருப்புவதற்காக லோடு வேனில் வந்த அவர்கள் அய்யப்பனை ஆம்பூர் சாலையில் கார் நிறுத்தும் இடத்தில் வீசி விட்டு தப்பிச் சென்றனர். இதன்பின் எதுவும் தெரியாதது போல் அவரவர் வேலையை பார்த்துள்ளனர். ஆனால் போலீசாரின் விசாரணையில் இந்த குட்டு உடைந்ததால் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கொய்யாப்பழம் வாங்கி விற்ற வகையில் ரூ.10 ஆயிரத்துக்காக நடந்த இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்