சிறுவாச்சூரில் 2 வீடுகளில் 6¾ பவுன் நகை திருட்டு

சிறுவாச்சூரில் 2 வீடுகளில் 6¾ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-09-19 23:15 GMT
பெரம்பலூர்,

திண்டுக்கல் மாவட்டம் சித்தாநத்தத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 34) . இவர் பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருவதால், தனது குடும்பத்தினருடன் சிறுவாச்சூர் சிவன்கோவில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் மனைவி, மகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சிவக்குமார் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான சித்தாநத்தத்திற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட, அக்கம், பக்கத்தினர் சிவக்குமாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சிவக்குமார் விரைந்து வந்து வீட்டிற்குள் பார்த்த போது, அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 5 பவுன் நகை திருடு போயிருந்தது.

நகை-பணம் திருட்டு

இதே போல் அதே தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் முகமது காசிம் மனைவி நபீஷா பேகம் (50) . கணவர் வெளிநாட்டிலும், மகன் சென்னையிலும் வேலை பார்த்து வருவதால், தனது மகள், மருமகன், பேரனுடன் வசித்து வருகிறார்.

கடந்த 16-ந்தேதி பூலாம்பாடி அருகே கீரவாடியில் உள்ள மகள் வீட்டிற்கு நபீஷா பேகம் தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த நபீஷா பேகம் வீட்டிற்குள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் இருந்த 1¾ பவுன் நகை, வெள்ளி கொலுசு ஒரு ஜோடி மற்றும் ரூ.7 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.

ஒரே தெருவில் 2 வீடுகளில் திருடு போன சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக புகார்களின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்