நாகூரில் கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள் விஷம் கலப்பா? போலீசார் விசாரணை

நாகூரில் கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன. குளத்தில் விஷம் கலக்கப்பட்டதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-09-20 02:21 GMT
நாகூர்,

நாகையை அடுத்த நாகூரில் நாகநாதர் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இக்கோவிலுக்கு சொந்தமான குளம் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படும். ஏலம் எடுத்தவர்கள் குளத்தில் வளரும் மீன்களை பிடித்து விற்பனை செய்வார்கள். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு ஏலம் விடப்படவில்லை.

கோவில் நிர்வாகம் சார்பில் குளத்தை பராமரித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளம் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் குறைவான தொகைக்கு குளம் ஏலம் போனதால், ஏலம் ரத்து செய்யப்பட்டது.

செத்து மிதந்த மீன்கள்

இந்த நிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளத்துக்கு குளிக்க சென்றனர். அப்போது குளத்தின் ஓரம் மீன்கள் செத்து மிதப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே தண்ணீரை எடுத்து நுகர்ந்து பார்த்தபோது விஷம் கலந்து இருப்பது போல் வாசம் அடித்தது. மேலும் குளத்தின் நிறமும் மாறி இருந்தது. இதுகுறித்து நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். குளத்தில் மீன்களை கொல்வதற்காக விஷம் கலக்கப்பட்டதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது நாகூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்