கோர்ட்டு பெண் ஊழியரை எரித்து கொல்ல முயன்ற விவகாரம்: சமூக வலைத்தளத்தில் பரவும் காட்சியால் குமரியில் பரபரப்பு

குளச்சல் அருகே கோர்ட்டு பெண் ஊழியரை கணவர் கட்டி வைத்து எரித்து கொல்ல முயலும் ‘சித்ரவதை’ வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Update: 2020-09-20 02:52 GMT
நாகர்கோவில்,

குளச்சல் அருகே பாலப்பள்ளம் நெடுவிளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்ராஜன் (வயது 53). இவருடைய மனைவி எப்சிபா (40). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

எப்சிபா இரணியல் கோர்ட்டில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வருகிறார். சுரேஷ்ராஜன் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சுரேஷ்ராஜன், தனது மனைவி எப்சிபாவை நாற்காலியில் கட்டி வைத்து மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொல்ல முயன்றார். அப்போது எப்சிபாயின் அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாரின் உதவியுடன் கதவை உடைத்து எப்சிபாயை மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 7-ந் தேதி சுரேஷ்ராஜனை கைது செய்தனர்.

வைரலாகும் வீடியோ

இந்த சம்பவம் நடந்து பல நாட்களுக்கு பின்பு தற்போது எப்சிபாவை கட்டி வைத்து எரித்து கொல்ல முயலும் வீடியோ காட்சி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைராக பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சி 2 நிமிடம் 11 வினாடிகள் ஓடுகிறது. அதை காப்பாற்ற சென்ற ஒருவர்தான் எடுத்துள்ளார்.

வீடியோவின் ஆரம்பத்தில் நாற்காலியில் எப்சிபா கைகள் கட்டப்பட்ட நிலையில் உட்கார்ந்து இருக்கிறார். அவரது முகம் துணியால் கட்டப்பட்டு இருக்கிறது. கணவர் சுரேஷ் ராஜன் அரை நிர்வாணமாக வீட்டுக்குள் சுற்றிக்கொண்டிருந்தார்.

எப்சிபாயின் நிலையை கண்ட இரண்டு வாலிபர்கள் விரைந்து சென்று அவரது முகத்தில் கட்டியிருந்த துணியை அகற்றிவிட்டு, கைகளில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து அவரை விடுவிக்கிறார்கள். எப்சிபாயின் காலில் வெட்டுகத்தியால் வெட்டப்பட்டு ரத்தம் பாய்ந்து கொண்டிருக்கிறது. கொடூர கணவனின் செயலால் பாதிக்கப்பட்ட எப்சிபா கதறி அழுது கொண்டிருக்கிறார். சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் அமைந்துள்ள இந்த சித்ரவதை காட்சி குமரி மாவட்டத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்