தேன்கனிகோட்டை அருகே தளி வனப்பகுதியில் 130 யானைகள் முகாம் கிராம மக்கள் பீதி

தேன்கனிக்கோட்டை அருகே தளி வனப்பகுதியில் 130 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Update: 2020-09-20 03:11 GMT
தேன்கனிக்கோட்டை,

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தளி வனப்பகுதிக்குள் நுழைந்தன. இந்த யானைகளை தளி வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து விரட்டும் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து மேலும் 80-க்கும் மேற்பட்ட யானைகள் தளி வனப்பகுதிக்குள் புகுந்துள்ளன.

தற்போது தளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 130 யானைகளும் 2 குழுக்களாக பிரிந்துள்ளன. இந்த யானைகள் வனப்பகுதியில் உணவு, தண்ணீர் தேடி ஆங்காங்கே குட்டிகளுடன் சுற்றித்திரின்றன. யானைகளின் நடமாட்டத்தை தளி வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். காட்டுயானைகள் கூட்டம் தளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் அருகிலுள்ள பேலகரை, கும்ளாபுரம், கங்கனப்பள்ளி, அளேவூர், கும்மாள அக்ரஹாரம், உனுசேநத்தம், மல்லேஷ்வரம், தேவரப்பெட்டா உள்ளிட்ட கிராமங்களில் வாழும் கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

கிராம மக்கள் பீதி

பொதுமக்கள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சுற்றித்திரிய வேண்டாம். பகல் நேரங்களில் விவசாய தோட்டங்களில் விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் பாதுகாப்பாக வேலை செய்ய வேண்டும். காட்டுயானைகள் கூட்டத்தை பார்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் கிராமமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தளி வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்