நாமக்கல் பஸ் நிலையத்தில் கலெக்டர் மெகராஜ் திடீர் ஆய்வு

நாமக்கல் பஸ் நிலையத்தில் கலெக்டர் மெகராஜ் திடீர் ஆய்வு நடத்தினார்.

Update: 2020-09-20 03:17 GMT
நாமக்கல்,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் தினந்தோறும் முககவசம் அணியாமல் வெளியே செல்பவர்கள் மீதும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று நாமக்கல் பஸ் நிலையத்தில் கலெக்டர் மெகராஜ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசங்களை வழங்கிய அவர்கள் நோய் தடுப்பு விதிமுறைகளை சரிவர பின்பற்றுமாறு அறிவுரை வழங்கினர். மேலும் பஸ் நிலையத்தில் நகராட்சி கட்டிடத்தில் இயங்கி வரும் கடைகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

அறிவுறுத்தல்

அப்போது முககவசம் அணியாமல் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்க கூடாது என கலெக்டர் மெகராஜ் கடைக்காரர்களிடம் கூறினார். இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தில் நின்ற பஸ்களில் ஏறிய கலெக்டர் மெகராஜ், சமூக இடைவெளியை பின்பற்றி அமர்ந்து செல்லுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தினார். மேலும் முககவசம் அணியாமல் வருபவர்களை பஸ்சில் பயணிக்க அனுமதிக்கக்கூடாது என டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் அவர் தெரிவித்தார்.

அதேபோல் பஸ்நிலையத்தில் இருந்த ஆட்டோ டிரைவர்களிடம், ஆட்டோக்களில் கட்டாயம் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் கோட்டைக்குமார், தாசில்தார் பச்சைமுத்து, நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம், துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி, நகராட்சி துப்புரவு அலுவலர் சுகவனம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்