புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2020-09-20 04:26 GMT
முருகபவனம்,

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் நடந்தது. அதன் பிறகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல் திண்டுக்கல் எம்.வி.எம். நகர் தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மூலவருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.

மேலும் திண்டுக்கல் நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள்

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதிகாலையிலேயே கோவில் பட்டாச்சாரியார்கள் சவுந்தரராஜ பெருமாளுக்கு அபிஷேக அலங் காரம் செய்தனர். இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசங்கள் அணிந்தும் பூதேவி, ஸ்ரீதேவியுடன் அருள்பாலித்த சவுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

இதேபோல் பழனி மேற்குரத வீதியில் உள்ள லட்சுமி நாராயண சாமி கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தது. இதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவ்வாறு வந்த பக்தர் கள் துளசி மாலை வாங்கி வந்து சுவாமிக்கு சாத்தி வழிபட்டனர். மேலும் பட்டத்து விநாயகர் கோவில் அருகே உள்ள பெருமாள் கோவில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில், சத்திரப்பட்டி அருகே விருப்பாட்சி தலையூத்து அருவி பகுதியில் அமைந்துள்ள நீலவரதராஜ பெருமாள், நல்காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக் கிழமையையொட்டி ஆஞ்சநேயருக்கு வண்ண மலர்களால் யோக ஆஞ்சநேயர் அலங் காரம் செய்யப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்