பல்லடம் அருகே, ஊராட்சி அலுவலகத்தில் தொழிலாளர்கள் முற்றுகை

பல்லடம் அருகே வடுகபாளையம்புதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-20 16:45 GMT
பல்லடம்,

பல்லடம் அருகே உள்ளது வடுகபாளையம் புதூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் இவர்களுக்கு பணி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தவரை ஊராட்சிமன்ற தலைவர் வேலையிலிருந்து நீக்கிவிட்டதாக தெரிகிறது.

இதனால் வேலை நடக்கும் இடத்திற்கே வராமல், குறைவான ஆட்கள் மட்டும் வேலைக்கு வந்ததாக பதிவு செய்யப்படுவதாகவும் கூறி, நேற்று வேலையை புறக்கணித்து தொழிலாளர்கள் வடுகபாளையம்புதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் பானுப்பிரியா, அந்ததொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது பணி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தவரை ஊராட்சிமன்ற தலைவர் வேலையிலிருந்து நீக்கி விட்டதாகவும், வேலை நடக்கும் இடத்திற்கே வராமல் குறைவான ஆட்கள் மட்டும் வேலைக்கு வந்ததாக பதிவு செய்யப்படுவதாகவும் கூறினர். மேலும் ஊராட்சி மன்றத்தலைவரின் கணவர் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் தலையீடுவதாகவும் தொழிலாளர்கள் கூறினர்.

இதையடுத்து, அதே மேற்பார்வையாளரை மீண்டும் பணியில் அமர்த்துவதாகவும், ஊராட்சிமன்ற நிர்வாகத்தில் வேறு நபர்கள் தலையீடு இருப்பதை விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் பானுப்பிரியா கூறினார். இதை அடுத்து தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர். தொழிலாளர்களின் முற்றுகை போராட்டத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்