நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை குற்றாலம் அருவிகளில் தண்ணீர் அதிகரிப்பு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

Update: 2020-09-20 22:30 GMT
நெல்லை,

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்று வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,455 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு 1, 405 கன அடி திறக்கப்பட்டுள்ளது. 143 அடி உயரம் கொண்ட இந்த அணை நீர்மட்டம் 82.40 அடியாக உள்ளது. இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 88.45 அடியாக உள்ளது.

118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 65.70 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 433 கன அடியாக அதிகரித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 85 அடி உயரம் கொண்ட கடனா அணை நீர்மட்டம் 72.60 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 81 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 60 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதே போல் 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 78 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 74 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 30 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 67.15 அடியாக உள்ளது. செங்கோட்டை அருகே 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை நீர்மட்டம் நேற்று மீண்டும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால் அணைக்கு வருகின்ற 11 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் அனுமதி இல்லாததால் அருவிக்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

நெல்லை மாவட்டம் பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மகேந்திரகிரி, குறவமலை பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அனுமன் ஆற்றில் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த சாரல் மழையால் கன்னிமார் ஓடை தடுப்பணைக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. இதனால் பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மழை பெய்தால் தண்ணீர் அனுமன் நதி வழியாக சுமார் 22 குளங்களுக்கு செல்லும். இதனால் அப்பகுதி விவசாய பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பாபநாசம் 8, சேர்வலாறு 4, மணிமுத்தாறு 1, கொடுமுடியாறு 5, அம்பை 1, சேரன்மாதேவி 1, நாங்குநேரி 5, களக்காடு 3, ராமநதி 5, கருப்பாநதி 18, குண்டாறு 9, அடவிநயினார் 40, செங்கோட்டை 2.

மேலும் செய்திகள்