பழ வியாபாரி கொலையில் கைதான பெண்ணுக்கு கொரோனா இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர்

பழ வியாபாரி கொலை வழக்கில் கைதான பெண்ணுக்கு கொரோனா தொற்ற உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Update: 2020-09-20 23:57 GMT
புதுச்சேரி,

கும்பகோணம் அருகே உள்ள திருக்கருகாவூர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 45). பழ வியாபாரி. இவர் கடந்த 14-ந் தேதி கை, கால் முறிந்த நிலையில் புதுவை ஆம்பூர் சாலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண் காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் மினிவேன் வாகனத்தில் வந்த 2 பேர் அய்யப்பனை தூக்கி வீசி விட்டுச் சென்றது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் மரக்காணம் கொய்யாப்பழ வியாபாரி செல்வி (52), அவரது கணவர் பழனி (52), அரியாங்குப்பம் அரசு (40), லாஸ்பேட்டை வேன் டிரைவர் முத்து (42) ஆகியோர் ரூ.10 ஆயிரம் கடனுக்காக சேதராப்பட்டு பகுதியில் வைத்து அய்யப்பனை அடித்து கொலை செய்து, உடலை ஆம்பூர் சாலையில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் பிடித்து கொரோனா பரிசோதனைக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையின் முடிவு நேற்று வந்தது. இதில் செல்விக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. மற்ற 3 பேருக்கும் தொற்று இல்லை.

செல்வி அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பெண் போலீசார் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்