ஆழியாறு அணை முழுகொள்ளளவை எட்டியது 7 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றம்

தொடர்மழையின் காரணமாக ஆழியாறு அணை நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியது. 7 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டன.

Update: 2020-09-21 04:26 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசத்தில் 6,400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பாசத்தில் 42 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது. மேலும் ஒப்பந்தபடி ஆண்டு தோறும் கேரளாவுக்கு 7¼ டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆழியாற்றில் மணக்கடவு என்ற இடத்தில் கேரளாவுக்கு தண்ணீர் பிரிந்து செல்கிறது. இதைத்தவிர பொள்ளாச்சி கிணத்துக்கடவு சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் கோவை மாவட்டம் குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் மக்களின் குடிநீர் தேவையையும் ஆழியாறு அணை மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக அணை முழுகொள்ளளவை எட்டியது. அதன்பிறகு பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதற்கிடையில் கடந்த ஜூலை மாதம் பெய்ய தொடங்கி தென்மேற்கு பருவமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி அணை 100 அடியை எட்டியது. அதன்பிறகு மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டம் குறைந்து வந்தது.

நீர்மட்டம் உயர்வு

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேற்று அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 5 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. மேலும் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் கூடுதலாக 2 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆழியாற்றின் இரு கரைகளையும் தொட்டப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையொட்டி ஆழியாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றம்

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஆழியாறு அணைக்கு அப்பர்அழியாறு அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 52 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 7 மதகுகள் வழியாக 3 ஆயிரத்து 737 கனஅடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. மேலும் ஆழியாறு மின் உற்பத்தி நிலையத்தில் மின்உற்பத்தி செய்யப்பட்டு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதைத்தவிர பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 150 கனஅடி அணையில் திறந்து விடப்பட்டுள்ளது.

120 கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 117.50 அடியாக முழுகொள்ளளவை எட்டியுள்ளது. நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அணைக்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கரையோர வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சுற்றுலா பயணிகள்

பொள்ளாச்சி பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருவதால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. வால்பறை பகுதியில் உள்ள சோலையார் அணை முழுகொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டுவதால் அவர்கள் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் காட்சியை கண்டு ரசித்தனர். சிலர் தண்ணீர் வெளியேறும் இடத்தில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்