புலியூர் அருகே நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மாற்ற கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

புலியூர் அருகே நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக்கடையை மாற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Update: 2020-09-22 02:01 GMT
கரூர்,

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமைகள் தோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கம் பொருட்டு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு அந்த அந்த தாலுக்கா அலுவலகங்களில் பொது மக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்கள் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில், சாமானிய மக்கள் நல கட்சி மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் வந்த பொது மக்கள் போட்ட மனுவில் கூறியிருப்பதாது:-

புலியூர் அருகே போக்கு வரத்து நிறைந்த மாநில நெடுஞ்சாலையில் கரூர்-திருச்சி மெயின்ரோட்டில் டாஸ்மாக்கடை ஒன்றுஅமைந்து உள்ளது. அதன் அருகில் மருத்துவமனையும், அதற்கு எதிரில் பேரூராட்சி அலுவலகமும் இயங்கி வருகிறது. மேலும் டாஸ்மாக்கடை பின்பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இதனால் அந்த சாலையை பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் பயன்படுத்தி வருவதால் அந்த சாலையில் போக்கு வரத்து நெரிசல் மிக்க பகுதியாக உள்ளது. எனவே அங்குள்ள டாஸ்மாக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

நிதி உதவி வழங்க வேண்டும்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள பேட்டப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பூங்கொடி என்ற பெண் தனது மகனுடன் வந்து போட்ட மனுவில், எனது மகன் நவலடியான் கடந்த 2018-ம் ஆண்டு புகளூரில் உள்ள ஐ.டி.ஐ.யில் சேர்ந்தார். அப்போது கல்லூரி சார்பாக தடுப்பூசி போடப்பட்டதாகவும், அவனுக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டு கிட்னி செயல் இழந்து விட்டது. மேலும் புதிய நோய் ஏற்பட்டு அவதியுற்று வருகிறான். இந்நிலையில் அவருடைய தந்தையும் இறந்து விட்ட நிலையில் கடன் வாங்கி ரூ.3 லட்சம் செலவழித்து விட்டேன். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தை அணுகி நஷ்ட ஈடு கேட்டும் எந்த பயனும் இல்லை. எனவே மிகவும் மோசமான உடல் நலனில் குறைவால் வாழும் எனது மகனின் உயிரை காக்கவும் அரசு சார்பாக உரிய நிதி உதவியும் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

மடிக்கணினி வேண்டும்

லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த முன்னாள் மாணவ- மாணவிகள் 25-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து போட்ட மனுவில், நாங்கள் லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டு சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பிளஸ்-2 படித்தோம். இந்தநிலையில் அந்த ஆண்டு வழங்க வேண்டிய அரசு மடிக்கணினி எங்கள் பள்ளியில் பயின்றவர்களுக்கு வழங்கவில்லை. எனவே எங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மடிக் கணினி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். குளித்தலை தாலுகா கடம்பவனேஸ்வரர் செங்கல் உற்பத்தியாளர் நல சங்கம் சார்பில் போட்ட மனுவில், இந்த சங்கத்தில் 21 பேர் உறுப்பினராக இருந்து குடிசை தொழிலாக செய்து வருகிறோம். இத்தொழில் மூலம் 250 குடும்பங்கள் பயன் பெற்ற வருகிறது. இந்நிலையில் களிமண் அள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளதால் கடந்த 6 மாதமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்களாகிய நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே களிமண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் பெண் ஒருவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவத்தையடுத்து அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு நேற்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே வரும் அனைவரையும் சோதனை செய்த பிறகே அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து வாயிலின் மையப்பகுதியில் நின்றிருந்த போலீசார் மீண்டும் ஒருமுறை அவர்களை சோதனை செய்த பிறகே உள்ளே அனுப்பி வைத்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்திற்குள் வரும் அனைத்து வழிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்