அர்ச்சகர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள்-வெள்ளி பொருட்கள் கொள்ளை

கீழ்வேளூரில், அர்ச்சகர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2020-09-22 02:21 GMT
சிக்கல்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள அரசாணிகுளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கணேஷ்குமார்(வயது 40). கோவில் அர்ச்சகரான இவர், நேற்று முன்தினம் காலை தனது குடும்பத்துடன் திருக்கண்ணங்குடியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கணேஷ்குமார் மீண்டும் தனது வீட்டுக்கு வந்தார். வீட்டின் வாசல் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்கு உள்ளே சென்று பாத்தார். அப்போது வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 40 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது.

போலீஸ் மோப்ப நாய்

இதனால் அதிர்ச்சி அடைந்த கணேஷ்குமார், இந்த கொள்ளை சம்பவம் குறித்து கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

நாகையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று தடயங்களை பதிவு செய்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து அரசாணி குளம், தெற்கு வீதி வழியாக ஓடி சென்று அங்குள்ள மெக்கானிக் கடை அருகே நின்று விட்டது.

ரூ.14½ லட்சம்

மேலும் நாகை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொள்ளை போன தங்கம் மற்றும் வெள்ளியின் மொத்த மதிப்பு ரூ.14½ லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவில் அர்ச்சகர் வீட்டில் ரூ.14½ லட்சம் மதிப்பிலான தங்கம்- வெள்ளி கொள்ளை போன சம்பவம் கீழ்வேளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்