சிதம்பரத்தில், ஆன்லைன் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் அனுப்ப தபால் நிலையத்தில் குவிந்தனர்

சிதம்பரத்தில் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் விடைத்தாளை அனுப்ப தபால் நிலையத்தில் குவிந்தனர்.

Update: 2020-09-22 05:04 GMT
அண்ணாமலைநகர்,

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் இறுதி பருவத்தேர்வுகளை நடத்திக்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருவள்ளுவர், காமராஜர், அண்ணா போன்ற பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி பருவத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆன்-லைன் மூலம் தேர்வு எழுதி, அந்த விடைத்தாளை விரைவு தபால் மூலம் அனுப்பி வருகின்றனர். சிலர் கல்லூரிக்கே நேரில் சென்று தேர்வு எழுதி விடைத்தாளை கல்லூரி ஆசிரியர்களிடம் வழங்கினர்.

விரைவு தபால்

இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களுக்கு இறுதி பருவ தேர்வு நேற்று தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை தேர்வு நடந்தது. இதேபோல் மற்ற பல்கலைக்கழகங்களில் படிக்கும் சிதம்பரம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஆன்லைன் மூலம் நேற்று தேர்வு எழுதினர். பின்னர் அவர்கள் தேர்வு எழுதி விடைத்தாளை விரைவு தபால் மூலம் அனுப்புவதற்காக சிதம்பரம் தபால் நிலையத்தில் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விரைவு தபால் அனுப்பி சென்றனர்.

மேலும் செய்திகள்