கடலூர் மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.

Update: 2020-09-22 05:06 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு தொற்று நோய் பரவாமலும், பொதுமக்கள் நலன் கருதியும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று, காணொலி காட்சி மூலம் குறைகேட்பு கூட்டம் கடந்த மாதம் 3-ந்தேதி முதல் கலெக்டர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பஸ் போக்குவரத்து வசதி காரணமாக அதிக அளவில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாத்திடவும், பொதுமக்களின் குறைகளை விரைவாக தீர்வு காணவும், அவர்களின் போக்குவரத்தை குறைத்திடவும், கோட்ட அளவில் திங்கட்கிழமை தோறும் காணொலி காட்சி மூலம் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும் என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி அறிவித்திருந்தார்.

நடவடிக்கை

அதன்படி கடலூரில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்தியா முன்னிலையில் நேற்று காலை காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.

இதில் குடும்ப அட்டை, பட்டா மாற்றம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 75 மனுக்களை ஆன்லைன் மூலம் அளித்தனர். இந்த கோரிக்கை மனுக்கள் மீது தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

விருத்தாசலம்

இதேபோல் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்திலும் காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் நடந்தது. இதற்கு சப்-கலெக்டர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். இதில் பட்டா மாற்றம், முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள், ஆன்லைன் மூலம் அளித்தனர். பின்னர் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் உத்தரவிட்டார். இதில் தலைமையிடத்து துணை தாசில்தார் விருத்தாசலம் பூர்ணிமா வினிதா, வேப்பூர் சாந்தி, திட்டக்குடி சீனிவாசன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்