பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யப்பட்டதால் போலீஸ் பாதுகாப்புடன் இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு

நெமிலி அருகே இளம்பெண்ணின் உடலை தோண்டிஎடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2020-09-22 05:33 GMT
நெமிலி,

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த திருமால்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி ஹேமலதா என்பவர் பிரசவித்த சில தினங்களே ஆன நிலையில் கடந்த 19-ந் தேதி இரவு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார். அடுத்தநாள் 20-ந் தேதி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், ஹேமலதாவின் உடலை அடக்கம் செய்ய முற்பட்டபோது, தகவலறிந்து அங்கு வந்த வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் மருத்துவத்துறையினர் இறந்த ஹேமலதா திருமணம் முடிந்து 6 ஆண்டுகளுக்குள் இறந்துள்ளார் என்பதால் சந்தேகத்தின் அடிப்படையில் அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னரே அடக்கம் செய்ய வேண்டும் என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இருதரப்பினருக்கும் இடையே 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாததால் பிரேத பரிசோதனை செய்யாமலேயே ஹேமலதா உடல் அடக்கம் செய்யப்பட்டது.

உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

திருமால்பூர் கிராமநிர்வாக அலுவலர் புகேழேந்தி கொடுத்த புகாரின் பேரில் நெமிலி போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அரக்கோணம் உதவி கலெக்டர் பேபி இந்திரா தலைமையில் வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவர் எல்.டி.கலைச்செல்வி, மருத்துவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ரதி ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினர், ஹேமலதாவின் உடலை தோண்டிஎடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

அரக்கோணம் துணைபோலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில், நெமிலி மற்றும் காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர்கள் பாரதி, லட்சுமிபதி உள்பட 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜராஜன், வட்டவழங்கல் அலுவலர் பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் தணிகைமணி, கிராமநிர்வாக அலுவலர் புகழேந்தி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இளம்பெண்ணின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்